தமிழர் தாயகப் பகுதியில் தொடர்ந்தும் அத்துமீறும் பேரினவாதம் – முறியடிக்கும் முயற்சியில் மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து ஒரு அணி, நில அளவை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் அறிந்ததையடுத்து, அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதியில் சுமார் பத்திற்கும் மேற்ப்பட்ட புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை சிறிலங்கா கடற்படையினர் அமைத்துள்ளனர்.

பல வருடங்களாக முயற்சி

அந்த காணிகளை கடந்த சில வருடங்களாக படை முகாமின் தேவைக்காக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பல தடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடுசெய்ய எடுத்த முயற்சிகள் மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

அத்துடன் காணி எடுத்தற் சட்டம் 05 ஆம் பிரிவின் (1) ஆம் சரத்திற்கு அமைய காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்தது.

அதனையடுத்து, காணி உரிமையாளர்களான தமிழ் மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தன.

அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் அணி திரள்வு

எனினும் மக்கள் அதற்கு இடமளிக்காததன் காரணமாக நில அளவை செயற்பாடு பல காலமாக இழுபறி நிலையிலேயே இருந்துகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவிருப்பதாக தகவல் அறிந்ததையடுத்து, மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான சிவபாதம் குகநேசன், கணபதிப்பிள்ளை விஜயகுமார், ஆறுமுகம் ஜோன்சன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கிராம மக்கள் ஆகியோர் ஒன்றுகூடியுள்ளனர்.

இதன் போது, நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ள வருபவர்களை முகாமுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர்கள் வந்தால் திருப்பி அனுப்புவோம் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

-ibc