இலங்கையில் மீண்டும் யுத்தத்தை தூண்ட முயற்சி – புலம்பெயர் அமைப்புக்கள் உள்ளிட்ட தமிழர் மீது குற்றச்சாட்டு

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட தமிழர் தரப்பினர் இலங்கையில் மீண்டும் யுத்தத்தை தூண்டிவிட முயற்சிப்பதாக இலங்கை மக்கள் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அதேநேரம் இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தாம் எதிர்ப்பை தெரிவிப்பதாக அக்கட்சியின் பிரசார செயலாளர் மதுபாஷான பிரபாத் ரனஹன்சா தெரிவித்துள்ளார்.

சமஷ்டி நடைமுறை

மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், நாடாளுமன்றத்தில் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும் தரப்பினர் நாட்டில் சமஷ்டியை நடைமுறைப்படுத்துமாறு கோரி வெளிநாட்டு தூதரங்களிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

எனினும் இவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். சமஷ்டியை நடைமுறைப்படுத்திய எந்தவொரு நாடும் இதுவரை அபிவிருத்தியடைந்து இல்லை.

இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யலாம் என்ற கூற்று தவறானது.

சுமந்திரனும் சாணக்கியனும் வாரத்திக்கு 3 நாட்களுக்கு மேல் கொழும்பில் இருந்து சுகபோக வாழ்க்கையை வாழுபவர்கள். இவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளது.

இவ்வாறானவர்கள் யாழ்ப்பாணத்தில் மற்றும் வடக்கில் இருக்கும் தமிழர்களுக்காக வாதிடுகிறார்கள். இலங்கையில் கஷ்டப்படும் மக்களுக்காக வாதிட அவர்களுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை.

சுவிட்ஸர்லாந்து அரசாங்கம்

சமஷ்டியை நடைமுறைப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் ஒத்துழைக்கக்கூடாது.

புலம்பெயர் அமைப்புக்கள் உள்ளிட்ட தமிழர் தரப்பிலான அமைப்புக்கள் மீண்டும் இலங்கையில் யுத்தத்தை தூண்டிவிட பார்க்கிறது” என்றார்.

 

 

 

-ibc