தேசிய இனப்பிரச்சினையை தேர்தல் பிரச்சாரத்துக்காக ரணில் பயன்படுத்தக்கூடாது

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பது தொடர்பான பேச்சுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதய சுத்தியுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதனை தேர்தல் பிரச்சாரத்துக்காக அவர் பயன்படுத்தக்கூடாது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (21.12.2022) இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் பாவனை

“போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான நடவடிக்கையின் ஓர் அங்கமாக பாடசாலைகளில் இன்று சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

பாடசாலை சிறார்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனால் மாணவர்கள் உள ரீதியில் பாதிக்கக்கூடும். எனவே, பொலிஸார் அடிக்கடி பாடசாலைகளுக்குள் நுழைவதை ஏற்கமுடியாது.

பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஒத்துழைப்புடன் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கப்படக்கூடாது. வடக்கு, கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

அரசியல் தீர்வு

அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். இது தொடர்பான பேச்சுகளை தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்காமல், இதய சுத்தியுடன் முன்னெடுக்க வேண்டும். எல்லா சமூகத்தினரையும் அரவணைத்துக்கொண்டு இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

தற்போதைய அரசுக்கு மக்கள் ஆணை இல்லை. எனவே, மக்கள் ஆணையுடன் தெரிவாகும் அரசின்கீழ் இப்பிரச்சினையை தீர்த்தால் ஏற்புடையதாக இருக்கும். எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயார். ஆனால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவாறா என்பது ஐயமாகவே உள்ளது.” என்றார்.

 

 

 

-tw