இந்த அரசாங்கம் இருக்கும் வரைக்கும் நாட்டுக்கு மீட்சி இல்லை! பொன்சேகா

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாட்டை இந்த அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியாது, இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரைக்கும் நாட்டுக்கு மீட்சி இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

எமது நாடு வங்குரோத்து அடைந்த நாடு என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளிடம் எமது நாடு கடன் பெற்றுள்ளது. அந்த கடனை மீளச் செலுத்திக் கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளது. இதனால் நாட்டு மக்களால் வாழ முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தீவிரமடைந்துள்ள பிரச்சினைகள்

வாழ்வாதார செலவீனம் அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. தொழில்வாய்ப்பற்ற நிலைமைகள் உருவாகியுள்ளன. தொழிற்றுறைகள் செயலிழந்துள்ளன.

நாட்டில் மந்தபோசனை பிரச்சினை என்பது தீவிர நிலைமையை அடைந்துள்ளது. மந்த போசனையால் ஒரு இலட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நூற்றுக்கு 50 வீதமானோர் மூன்று வேளைகளும் உணவு உட்கொள்ள முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் வறுமை நிலைமை அதிகரித்துள்ளது. பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்குத் தேவையான கொப்பிகள், புத்தகங்களை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்களிடம் போதிய பணம் இல்லை. நாட்டில் சகல துறைகளும் செயலிழந்து காணப்படுகின்றது. நாடு இன்று வங்குரோத்து அடைந்தமைக்கு அரசியல்வாதிகளே பொறுப்புக்கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

-mm