இலங்கையில் இம்மாதத்திற்குள் மூட வேண்டிய அபாயத்தில் 20000 வணிகங்கள்

இலங்கையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கடன்களை மீளச்செலுத்தும் மொரடொரியம் என்ற நிவாரணக்காலத்தை மேலும் நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு உள்ளூர் வணிக நிறுவனங்கள், மத்திய வங்கியிடம் வலியுறுத்தியுள்ளன.

தேசிய வர்த்தக பாதுகாப்பு சபையின் கூற்றுப்படி,

தேசிய பொருளாதாரத்தில் நிலவும் சவால்கள் காரணமாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் 1,000 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.

இந்த நிலையில் தற்போதுள்ள அதிக வட்டி விகிதத்தில் கடனை செலுத்த முடியாமல் தவிப்பதாக உறுப்பினர்கள் தொடர்ந்து முறையிட்டு வருவதாக சபையின் தலைவர் மகேந்திர பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் மீளச்செலுத்தும் கால நீடிப்பு அவகாசம் 2022 டிசம்பர் 31, அதாவது இன்றுடன் முடிவடைகிறது.

எனவே இந்த காலத்தை நீடிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தேசிய வர்த்தக பாதுகாப்பு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான இயல்பு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த நாட்டில் வங்கித் துறையும் வீழ்ச்சியடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வணிகத்துறையால், பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி மற்றும் மூலதனத்தைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதத்தை ஏற்படுவதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையானால், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் குறைந்தது 20,000 வணிகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் கிடைத்தவுடன், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்களின் உதவியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர், நந்தலால் வீரசிங்க கடந்த வியாழனன்று உள்ளூர் வர்த்தக சங்கங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

-jvp