கோட்டாபயவின் செயற்பாடுகளே நாட்டின் அழிவுக்கு காரணம்-பைசர் முஸ்தபா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகள் காரணமாகவே நாட்டுக்கு தற்போதைய அழிவு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஏற்படுத்திய அழிவுக்காக வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் பதவியை கைவிட நேரிட்டது

கோட்டாபாய ராஜபக்சவின் செயற்பாடுகளேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டது. இப்படியான மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தியதன் காரணமாவே வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி ஒருவருக்கு தனது பதவியை கைவிட நேரிடடது.

கோட்டாபய ராஜபக்ச செய்த பொருளாதார அழிவு காரணமாக எமக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல நேரிட்டது. சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு முன்னதாகவே அவரிடம் கூறினார்கள்.

தலைக்கனம் காரணமாக அவர் செல்லவில்லை. தற்போதாவது சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக ஏதாவது ஒரு நிவாரணத்தை பெற வேண்டும்.

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமும் தவறுகள் இருக்கின்றன. அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவி வகித்த பின்னர் ஓய்வுபெற்றிருந்தால், மக்கள் தற்போதும் அவரை தெய்வத்தை போல் போற்றுவார்கள்.

காரணம் அவர் போரை முடிவுக்கு கொண்டு வந்த யுக நாயகன். இது எந்த விவாதங்களும் இன்றி நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம்.

கோட்டாபயவை பதவிக்கு கொண்டு வந்தமைக்கான முழுப் பொறுப்பையும் மகிந்த ஏற்க வேண்டும்

அத்துடன் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்தமைக்கான முழுப் பொறுப்பையும் மகிந்த ராஜபக்சவே ஏற்க வேண்டும். அரசியலில் ஈடுபட்டவர் என்ற வகையில் தனது சகோதரரின் திறமை மற்றும் திறமையின்மையை அறியாமல் இருந்தது சிக்கலுக்குரியது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட முழு அழிவுக்கான பொறுப்பையும் மகிந்த ராஜபக்சவே ஏற்க வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர், தனது சகோதரர்கள் கூறுவதை கேட்கவில்லை. எனக்கே எல்லாம் தெரியும் என்று அவர் செய்ததை அறிந்தவர்கள் அறிவார்கள்.

இதனால், நாம் எப்போதும் ஒரு நபரை சுற்றி ஒன்றிணையாது, கொள்கை ஒன்றுக்கு அமைய ஒன்றிணைய வேண்டும். தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டியது நபரை அல்ல, கொள்கையையே வெற்றி பெற செய்ய வேண்டும்.

கோட்டாபயவால் யுத்த வெற்றி கிடைக்கவில்லை

அதேவேளை கோட்டாபய ராஜபக்ச காரணமாக யுத்தத்தில் வெற்றி கிடைக்கவில்லை. அவர் ஆட்சியில் இருக்கும் போது அவரது செயற்பாடுகளை பார்த்தால், போர் சம்பந்தமாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அவர் இல்லை என்றால், யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது தனது நம்பிக்கை எனவும் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

-tw