தேர்தலை நிறுத்துவதற்கு திட்டம் – அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டைப் பெறுவதற்கான யோசனையொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளதாக உயர்மட்ட நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு வரும் போது இந்த யோசனை முன்வைக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

வழக்கின் அடுத்த விசாரணை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறும். இந்த நேரத்தில் தேர்தலுக்கு தேவையான பணத்தை வழங்குவதில் நிதி அமைச்சிற்கு சிரமம்,காவல்துறையினர் தேர்தலுக்கான பாதுகாப்பை வழங்குவதில் சிரமம், தேர்தலின் போது எரிபொருள் மற்றும் எரிசக்தி வழங்குவதில் சிரமம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் எல்லை நிர்ணயப் பணிகள்

தேர்தல் எல்லை நிர்ணயப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை, தேர்தல் செலவுக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் விதிமுறைகள் இதுவரை முறையாகத் தயாரிக்கப்படவில்லை, இளைஞர் பிரதிநிதித்துவம் 30 ஆக உயர்த்தப்படுதல் உள்ளிட்ட பல விடயங்கள் தேர்தலை ஒத்திவைக்க முன்வைக்கப்பட்ட காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் விளக்கமளித்த அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர், திறந்த நீதிமன்றில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இந்த பிரேரணையை சமர்ப்பிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும், அதே ஆணைக்குழுவின் இணக்கத்துடன் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்குமாறும் கோருவதாகவும் தெரிவித்தார்.

 

 

-ibc