சிங்களவருக்கு எதிராக பேசுவோரை பாதுகாக்கும் பௌத்த நாடு – சரத்வீரசேகர முழக்கம்

இலங்கை சிங்கள பௌத்த நாடு என் பதாலேயே, சிங்களவர்களுக்கு எதிராக பேசுபவர்களும் இலங்கையில் பாதுகாக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் அதிபரின் அக்கிராசன உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய செல்வராஜா கஜேந்திரன் எம்பி, இது சிங்கள பௌத்த நாடல்ல என்று கருத்து வெளியிட்டார்.

இது, தொடர்பில் ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து தெரிவித்தபோதே சரத் வீரசேகர எம். பி இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

குருந்தூர் மலை விகாரைக்கு

”இது சிங்கள பௌத்த நாடல்ல என்று கஜேந்திரன் எம்பி கூறுகின்றார். இவர்கள், குருந்தூர் மலையிலுள்ள விகாரைக்கு சென்று மலரொன்றையேனும் வைத்து வழிபடுவதற்கு பிக்குகளுக்கு இடமளிப்பதில்லை. எனினும், அவர்கள் இங்கும் பாதுகாப்பாகவே உள்ளனர். இது சிங்கள பௌத்த நாடு என்பதனாலேயே இவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கு எதிராக குரல் எழுப்பி விட்டு, இங்கே வந்து பாதுகாப்பாக இருப்பதும் இது சிங்கள நாடு என்பதனாலேயே. இதனை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

கஜேந்திரன் பதிலடி

அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த கஜேந்திரன் எம்.பி: இவரைப்போன்ற இனவாதிகளால்தான் இந்தத் தீவில் இரத்த ஆறு ஓடியது. இந்த நாடு 30 வருடங்களாக பிரிந்திருந்தது. இப்படியானவர்களை ஒதுக்கி விட்டு, முற்போக்கான சிந்தனையுள்ள நல்ல மனிதர்களை தேர்ந்தெடுங்கள்.

இவ்வாறான முழு இனவாதிகளை வைத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இவர் போன்றவர்களாலேயே கோட்டாபய ராஜபக்‌சவை மக்கள் விரட்டியடிக்கும் நிலை ஏற்பட்டது. இவர் போன்ற அடிமுட்டாள்களின் கதைகளை எவரும் கேட்கக் கூடாதென்றும் அவர் தெரிவித்தார்.

 

 

-ib