ஐசிசி மகளிர் டி20 உலகப் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இலங்கை

ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவின் நியுலண்ட்ஸ் விளையாட்டரங்கில் இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது குழு போட்டியுடன் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 129 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணி சார்பில் கேட்பன் சமாரி அத்தப்பத்து அதிகபட்சமாக 50 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்றார். விஷ்மி குணரத்ன 34 பந்துகளுக்கு 35 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஷப்னிம் இஸ்மாயில், மரிசான் கேப், ஆகியோர் தல ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 130 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 126 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

இந்நிலையில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக கேட்பன் சுனே லூஸ் 27 பந்துகளுக்கு 28 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இனோகா ரணவீர 3 விக்கெட்டுகளையும், சுகந்திகா குமாரியும், ஓஷதி ரணசிங்கவும் தல 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

 

 

-jv