இலங்கையில் பிரிட்டிஷ் பிரஜை சுட்டுக்கொலை; பின்னணியில் அரசியல்வாதி

இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலையில் உள்ளூர் அரசியல்வாதியொருவர் சம்பந்தப்பட்ட தகராற்றில் பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குராம் ஸமான் ஷேய்க் என்ற இஸ்ரேல் வம்சாவழி பிரிட்டிஷ் பிரஜையே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். அவருடனிருந்த விக்டோரியா அலெக்ஷாந்துவானா என்ற ரஷ்ய பெண்மணி படுகாயமடைந்து கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மெடில்ல என்ற இடத்தில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இசை நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த உள்ளூர்வாசிகளுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் இடையில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது.

கூரிய ஆயுதமொன்றால் குத்திக் கொல்லப்பட்டுள்ள நபரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயமும் காணப்படுவதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையை மேற்கோள்காட்டி இலங்கை காவல்துறைப் பேச்சாளர் எஸ்பி அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை ஆளுங்கட்சியைச் சேர்ந்த, தங்காலை பிரதேச சபைத் தலைவர் சம்பத் விதான பத்திரன கொலைச் சம்பவத்துக்கு முன்னதாக குறித்த சுற்றுலாப் பயணியுடனும் அவருடனிருந்த ரஷ்ய பெண்ணிடமும் மோதலில் ஈடுபட்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் கூறினர்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர பிபிசியிடம் கூறினார்.

TAGS: