இலங்கையில் தேர்தலை நடத்தப்போவதில்லை

இலங்கையில் தேர்தலை நடத்தப்போவதில்லை என அதிபர் மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவும், அரசியலமைப்பு மற்றும் தேர்தல் தொடர்பான சட்டங்களை மீறும் நோக்கில் நகர்வதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த எரான் விக்ரமரத்ன, அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு புறம்பாக தேர்தலை நடத்துவதுவதற்கு இடையூறு ஏற்படுத்துவது இதுவே முதல்முறை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலுக்கான இடையூறு

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டொன்றிற்கு சட்டத்தின் ஆட்சி முக்கியமானது. நிர்வாகத்தை சீர்குலைப்பதன் மூலம் இலங்கைக்கு சர்வதேச உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கான பொறுப்பை அதிபரும் அரசாங்கமும் ஏற்க வேண்டும்.

தேர்தலை நடத்தாமல் அரசியலமைப்பை மீறும் ஜனநாயக விரோத அமைப்பை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருகிறது.

2022ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் 2023ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

பணம் செலுத்தாமல் வாக்குச் சீட்டு அச்சடிப்பு

2010ஆம் ஆண்டு மே மாதத் தேர்தலுக்கான அச்சடிப்புச் செலவு, தேர்தல் முடிந்து நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஒகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அரச அச்சகத்திற்கு வழங்கப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலுக்கான செலவினங்களுக்காக அரசாங்க அச்சகருக்கு அந்த வருடம் ஒக்டோபரில் பணம் வழங்கப்பட்டது.

2019 அதிபர் தேர்தல் கொடுப்பனவுகள் எட்டு மாதங்களுக்குப் பின்னர் அரசாங்க அச்சகத்திற்கு வழங்கப்பட்டது.

எனவே அச்சிடுவதற்கு தேவையான அனைத்து வளங்களும் இருந்தும், முன்கூட்டியே பணம் செலுத்தாமல் வாக்குச் சீட்டுகளை அச்சிட முடியாது என அறிவிப்பது, தேர்தலை ஒத்திவைக்க தடைகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்ட தந்திரமான செயற்பாடு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

 

 

-jv