இலங்கை ஆணைக்குழு அறிக்கையை இந்திய அரசு வரவேற்றுள்ளது

போருக்குப் பின்னர் இலங்கை குடியரசுத் தலைவரினால் பணிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்றுள்ள இந்திய அரசு, இலங்கை அரசாங்கம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை அளித்த பின் இந்தியா முதல் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியிறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிகாட்டியுள்ளபடி மனித உரிமை மீறல்கள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும். அப்படியான விசாரணை ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இடம் பெறவேண்டும். பல தசாப்தங்களாக நடைபெற்ற போரின் காயங்களை ஆறவைக்கும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் மூலம் நீடித்திருக்கக்கூடிய சமாதானத்தை ஏற்படுத்த அந்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பில் காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்த விபரங்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த தகவல்கள், மும்மொழி கொள்கையை முன்னெடுத்துச் செல்வது, அனைத்து அலுவலகங்களிலும் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிப்பது, உயர் பாதுகாப்பு வலயங்களை குறைப்பது. இராணுவத்தினரிடமுள்ள தனியார் காணிகளை திரும்ப ஒப்படைப்பது, வடமாகாணத்தில் சிவில் நிர்வாகத்தை மீண்டும் கொண்டுவருவது போன்றவை தொடர்பில் எடுக்கப்பட திட்டமிடப்படும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளது.

மீள்குடியேற்றம் தொடர்பாக இலங்கை கொடுத்துள்ள வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவதும், பொதுமக்கள் தமது இயல்பான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக இருக்கும்.

இலங்கையில் ஏற்பட்ட மோதல்களுக்கு அடிப்படையில் இருந்த காரணங்களை அரசு உணர்ந்து கொண்டு அதற்கு தீர்வு காணும் வகையில், ஒரு அரசியல் தீர்வின் மூலம் ஒரு மித்த கருத்துடன் கூடிய நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை முன்னர் பலமுறை இந்தியாவுக்கு வாக்குறுதிகளை அளித்துள்ளது என்றாலும், அர்த்தமுள்ள வகையிலான அதிகாரப்பகிர்வு, உண்மையான நல்லிணக்கத்துக்கும் வழிவகுக்கும் என்பதை இலங்கை அரசு உணர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகின்றோம்.

அப்படியான ஒரு இணக்கப்பாட்டை நோக்கி இலங்கை செல்வதற்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

TAGS: