தமிழின அழிப்புக்கு சர்வதேச நிதி உதவி

மட்டக்களப்பு – மயிலந்தனையில் மாதுறு ஓயா திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கி தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச உதவி நிறுவனங்கள் துணை போகக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.

அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் தமிழர் பகுதியை சிங்களமயமாக்கும் நடவடிக்கைக்கு துணை போனால் நிதி வழங்கிய சர்வதேச நிறுவனங்களில் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராடுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மயிலந்தனை – மாதந்தனை மேய்சல் தரவை பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் ஆகியோர் தமது கட்சி ஆதரவாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்து பண்ணையாளர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கஜேந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்களை விரட்டுவதற்கான திட்டம்

மேலும், மட்டக்களப்பு – பொலன்னறுவை எல்லைப் பிரதேசமான மயிலந்தனை மடு பெரிய மாந்தனை பிரதேசத்தில் மேய்ச்சல்தரை பகுதியில் தமிழ் கால்நடைப் பண்ணையாளர்களை அச்சுறுத்தி, அவர்களின் கால்நடைகளை வெட்டிக் கொன்று, தமிழர்களை அவர்களின் பரம்பரையான மேய்ச்சல் தரையில் இருந்து விரட்டுவதற்கான திட்டம் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை குறித்து பண்ணையாளர்கள் பல இடங்களில் முறையிட்டனர். ஆனால் நியாயம் கிடைக்கவில்லை: அவர்களின் வாழ்வே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாதுறு ஓயா வலதுகரையை சிங்கள மயமாக்கும் நோக்கத்தோடு இங்குள்ள தமிழ் பண்ணையாளருக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர், வனவள திணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை போன்ற அனைத்து கட்டமைப்புக்களும் இங்குள்ள மேய்ச்சல் தரை காணிகளை அபகரிப்பதற்கான நடவடிக்கைகளில் உறுதியாக உள்ளன.

தமிழ் பிரதேசத்தில் தமிழின இன சுத்திகரிப்பு செய்து, அங்கு சிங்கள குடியேற்றத்தை மேற்கொண்டு இங்குள்ள மக்களை பட்டினிச் சாவுக்குள் தள்ளும் நடவடிக்கையாக மாதுறு ஓய அபிவிருத்தி திட்டம் அமைகிறது.

சிங்கள இனவாத சித்தாந்தம்

இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கு கின்ற சர்வதேச நிறுவனங்களே! நீங்களும் தமிழ் இன சுத்திகரிப்புக்கு உடந்தையாக இருக்கின்றீர்களா? சிங்கள இனவாத சித்தாந்தத்திற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகின்றது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

அல்லது நிதி வழங்கும் சர்வதேச நிறுவன அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

கோட்டாபாய ராஜபக்ச அதிபராக இருந்த போது இந்த விடயங்களை நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். இதையடுத்து திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக உத்தரவாதம் தரப்பட்டது. எனினும் தொடர்ந்து தமிழர்களை விரட்டி, சிங்கள மயமாக்கல் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதிபராக ரணில் விக்ரமசிங்கவை செல்லப்பிள்ளையாக கருதி சர்வதேச நாடுகள் காப்பாற்றும் அதே நேரத்தில் அவரது ஆட்சியின் கீழ் இனவாத தமிழின விரோத செயற்பாடு கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்ற யதார்த்தத்தையும் உணர வேண்டும்.

சர்வதேச நாடுகள் நிதியுதவிகளை அபிவிருத்திக்கான நிபந்தனையுடன் மட்டுமே வழங்க வேண்டும். இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் உதவிகளை செய்ய வேண்டும்.

மாதுறு ஓயா வலதுகரை திட்டம் மக்களுக்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டமாக இருக்க வேண்டும். தவிர இது இங்குள்ள தமிழ் மக்களை அப்புறப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இன அழிப்புக்கு ஒப்பான திட்டமாக அமையக்கூடாது. இங்கு பரம்பரையாக இருக்ககூடிய தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

 

 

-ib