ஐ. நாவின் மனித உரிமைகள் குழுவில் நடைபெறவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றிய மீளாய்வுக்கான இலங்கை அரச தூதுக்குழுவில், யுத்தகுற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடைசெய்யுமாறு இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG), ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுபோல, ஏனைய மனித உரிமை அமைப்புக்களும், தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடை செய்யக்கோரி, ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் வேண்டுகோள் விடுக்குமாறும் ICPPG அவரச அழைப்பு விடுத்துள்ளது.
இவ்வாறாக யுத்த குற்றவாளிகளை ஐ.நா தடை செய்ய தவறும் சம்பவங்கள் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சித்திரவதைக்குள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தங்களைப் போன்ற சர்வதேச அரச சார்பற்ற மனித உரிமைகள் அமைப்புக்களிற்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் ICPPG தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், 07ம் திகதி கார்த்திகை 2016 முதல் 27ம் திகதி ஆடி 2017 வரை குலதுங்க ஜோசப் முகாமுக்கு (SFHQ-W) பொறுப்பான தளபதியாக இருந்தார். இந்த காலகட்டத்தில் ஜோசப் முகாமில் சித்திரவதைக்கு ஆளான பலர் பிரித்தானியா மற்றும் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
2016 இல் குலதுங்கவின் முன்னோடியான சிசிர மென்டிஸ் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிற்கு அனுப்பப்பட்ட போது பெலிஸ் கெயர் செய்ததைப் போல, ஆககுறைந்தது அவரது பங்கு பற்றி அவரிடம் வினா எமுப்புமாறு ஐ.நா மனித உரிமைகள் குழுவை கோரியுள்ளதுடன் முன்னாள், தற்போதைய மற்றும் எதிர்கால குற்றவாளிகளுக்கு ஒரு இறுக்கமான செய்தியை அனுப்புமாறும் ICPPG கோரியுள்ளது.
இது மற்றவர்கள் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடுவதை தடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ICPPG பணிப்பாளர் அம்பிகை செல்வகுமார், குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகளை ஒன்றிணைத்து ஐ.நாவை வலியுறுத்துமாறு அழைப்பு விடத்ததுடன் இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மீளாய்வு செய்வதற்கு எவ்வாறு ஐ.நா போர்க்குற்றவாளியை அனுமதிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-tw