தேர்தலுக்காக எரிபொருளை விநியோகிக்க முடியாது

உள்ளூராட்சி மன்றத் சபை தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழுவுக்கும், வேட்பாளர்களுக்கும் எரிபொருளை விநியோகிக்க முடியாது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலதிகமாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நிதியை திரட்டிக் கொண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய குறைந்தது 3 அல்லது 6 மாதங்களேனும் செல்லும். ஆகவே விரைவாக எரிபொருள் விநியோகிக்க முடியாது என  அவர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தது,

தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவுக்கு எரிபொருளை விநியோகிக்க வலுசக்தி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை அடிப்படையற்றது.

அரசாங்க தரப்பு வேட்பாளர்கள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடாமல் உள்ளார்கள்.

ஆனால் கடந்த காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட போது கறுப்புச்சந்தை ஊடாக எரிபொருளை பதுக்கி வைத்த மக்கள் விடுதலை முன்னணியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் தற்போது அதனை பயன்படுத்தி முழு நாட்டையும் வலம் வருகிறார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட 80 ஆயிரத்திற்கும் அதிகமான வேட்பாளர்கள் தயாராக உள்ளார்கள், எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க வேண்டுமாயின் அனைவருக்கும் கோட்டாவை அதிகரித்துக் கொடுக்க வேண்டும், தற்போதைய நிலையில் மருத்துவ சேவைக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்க முடியாது.

வேட்பாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு மாத்திரம் 5 லீற்றர் எரிபொருள் வழங்கப்படுகிறது, ஆனால் இவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட ஒரு நாளைக்கு 5 லீற்றர் எரிபொருளை விநியோகிக்குமாறு கேட்கிறார்கள்.

5 லீற்றர் எரிபொருள் போதாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் தற்போது எவருக்கும் எரிபொருள் கோட்டாவை அதிகரித்துக் கொடுக்க முடியாது.

எரிபொருள் இறக்குமதிக்கான டொலரை திரட்டிக் கொண்டு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களேனும் செல்லும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளோம்.

எரிபொருள் விநியோகம் முழுமையாக வழமைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் மாதம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானித்துள்ளோம்.

எரிபொருள் விலை குறைவடையும் போது அதன் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம். மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகிய அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும் என்றார்.

 

 

-jv