ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டிருந்த தமிழக வருமான துறை அதிகாரிக்கு எதிராக திணைக்கள ரீதியான சட்ட நடவடிக்கை மேற்காள்ளப்பட்டிருந்தது.

அதனையடுத்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம், அதிகாரிக்கு எதிராக ஊதியக் குறைப்பு செய்யும் தீர்மானத்தை தீர்ப்பாக அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில், குறித்த அதிகாரி அந்த தீர்ப்பை அறிவித்த தீர்ப்பாயத்திற்கு எதிராக மனுத் தாக்கல் செய்த போது, மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக 2009 பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் உணவுத்தவிர்ப்பை மேற்கொண்டமை மற்றும் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை எதிர்த்து காங்கிரஸின் தலைவருக்கு கடிதம் எழுதியமை தொடர்பில், இந்திய வருவாய் சேவை அதிகாரியான ஜி.பாலமுருகனுக்கு எதிராக திணைக்கள ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊதியக் குறைப்பு உத்தரவு

இதற்கு ஆதரவாக, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதி மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அவருக்கு மூன்று ஆண்டுக்கு மூன்று தடவைகளாக ஊதியக்குறைப்பு உத்தரவை பிறப்பித்தது.

இதனையடுத்து மனுதாரரான பாலமுருகன், இந்திய குடியரசு தலைவருக்கு இரண்டு முறை விண்ணப்பித்தும் பதில் கிடைக்கவில்லை. எனவே, குறித்த தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அவர், நீதிப்பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையிலேயே, அவருக்கு எதிராக தீர்ப்பை அறிவித்த தீர்ப்பாயத்துக்கு எதிராக தாக்கல் செய்த பேராணை மனுவில் தலையிட சென்னை மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மனுவை தள்ளுபடி

நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மேல்நீதிமன்ற நீதிபதிகள் இந்த நிலைப்பாட்டை அறிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

நீதிமன்ற விசாரணையின் போது, அரச ஊழியராக இருந்தும், அரசின் கொள்கைகளை விமர்சித்த மனுதாரரின் நடத்தையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அரச தரப்பு வாதத்தை முன்வைத்தது.

சென்னை மேல் நீதிமன்றின் அறிவிப்பு

மேலும் இலங்கை தமிழர் பிரச்சினையில் அவர் தனிப்பட்ட கருத்தை கொண்டிருந்தாலும், அரச ஊழியர் என்ற அடிப்படையில் அவர் தமது கருத்துக்களை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அரசதரப்பு சட்டத்தரணிகள் தமது வாதத்தை முன்வைத்திருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை மேல் நீதிமன்றம் வருவாய்துறை அதிகாரியின் மனுவை தள்ளுபடி செய்தது.

 

 

 

-ib