இந்த நாட்டின் தலைவர்கள் திருந்தாவிட்டால் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லாத நாட்டில் இலங்கையர்கள் என்று சொல்லும் எவருக்கும் நல்ல எதிர்காலம் அமையாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 125வது ஜனனதினத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.
இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இந்த இரத்ததான முகாம் மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள தனியார் விடுதியில் நடாத்தப்பட்டது.
இதன்போது தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இரத்ததான முகாம் நடாத்தப்பட்டதுடன் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், தந்தை செல்வா காட்டிய வழியில் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வினை காணவேண்டும் என்ற ரீதியில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் முன்னுதாரணமான செயற்பாடுகளை வெளிப்படுத்திவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாலிபர்கள் தமிழ் தேசியத்தின் பாதையில் உறுதியாகயிருக்கின்றார்கள். அவர்களினால் நான் 29 வயதில் நாடாளுமன்றம் அனுப்பிவைக்கப்பட்டேன். வடகிழக்கின் தமிழர்களின் நிலைமை,இந்த மாவட்டத்தின் தமிழர்களின் நிலைமையென்பது தமிழர்களை அடக்கி தமது ஆட்சியதிகாரத்தினை தக்கவைப்பதை நோக்காக கொண்டே இடம்பெற்றுவந்துள்ளது.
இந்த செயற்பாடு தந்தை செல்வா காலத்திலும் தலைவர் சம்பந்தன் ஐயா காலத்திலும் இவ்வாறுதான் நடைபெற்றுவருகின்றது. காணிகள்தான் ஒரு இனத்தின் அடையாளமாகவுள்ளது.
கடந்த 75வருடமாக எமது அடையாளங்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்டுவந்த செயற்பாடுகள் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலும் நடைபெறுவது என்பது வேதனையான விடயமாகும். அண்மையில் வவுணியா வெடுக்குநாறி மலைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையில் இருந்த சிவலிங்கம் அகற்றப்பட்டு அங்கு பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதை தமிழ் மக்கள் வன்மையாக கண்டிக்கின்றார்கள். இவற்றினையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் ஆட்சியாளர்கள் இருப்பது கவலைக்குரியதாகும். இதனையும் தாண்டி போராட்டம் முன்னெடுப்பவர்களை அடக்குவதற்காக 1979 ஆம் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் 44 வருடங்களாக அதிகூடிய அளவில் தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அதனை புதிய வடிவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை விட மிக மோசமான சட்டத்தினை புதிய வடிவில் கொண்டுவருவதற்கு ரணில் அரசு முன்னெடுக்கின்றது. சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான சட்டம் என்ற வகையில் புதிய ஒரு சட்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. இது பயங்கரவாத தடைச்சட்டத்தினை விட மிகமோசமான சட்டம் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களின் பார்வையில் புதிதாக கொண்டுவரப்படும் சட்டம் மிக மோசமான சட்டமாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு வடகிழக்கில் ஆரம்பித்து நாடு முழுவதிலும் அனைத்து இன மக்களினதும் ஆதரவுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்காமல் அதனைவிட மோசமான சட்டத்தினை கொண்டுவருவார்களானால் இந்த நாட்டினை ஆட்சிசெய்யும் தலைவர்கள் திருந்தமாட்டார்கள் என்பதையே சொல்லவேண்டும். மேலும் இந்த நாட்டின் தலைவர்கள் திருந்தாவிட்டால் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை.
தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லாத நாட்டில் இலங்கையர்கள் என்று சொல்லும் எவருக்கும் நல்லதொரு எதிர்காலம் அமையாது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
-jv