ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும்

அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தும் செயற்பாட்டைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட தலைமைகள் நிறுத்த வேண்டும் என வவுனியா ஊடக மையம் கோரியுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் எஸ்.தவபாலன் சமூக ஊடகத்தில் வவுனியா ஊடகவியலாளருக்கு அவதூறை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக நேற்றைய தினம் (16.04.2023) வவுனியா ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  வவுனியா மாவட்டத்தில் பல்வேறு நெருக்கடிகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரும் தமிழ் ஊடகவியலாளர்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்.

வவுனியா ஊடக அமையம்

அத்துடன், இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் மாவட்டத்தின் அடையாளமுமாகத் திகழ்ந்த மாணிக்கவாசகம் ஐயா அவர்களையும் வவுனியா மாவட்டம் இழந்து நிற்கின்றது.

இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் ஒருவர் சமூக ஊடகத்தில் வவுனியா ஊடகவியலாளர்களையும், மரணித்த மூத்த ஊடகவியலாளரையும் இழிவு படுத்தும் முகமாக தமது கட்சி உறுப்பினர் விட்ட தவறை மறைக்க செயற்பட்டமையை வவுனியா ஊடக அமையம் கண்டிக்கின்றது.

கடந்த 9ஆம் திகதி வவுனியா வாடி வீட்டில் பல்வேறு கட்சிகள், பொது அமைப்புகளின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டு தனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.

தமிழ் ஊடகவியலாளர்கள்

கூட்டத்தின் ஆரம்பம் முதல் பங்குபற்றிய அவர் கூட்டம் முடிவதற்கு முன்னர் அங்கிருந்து சென்றிருந்தார். ஆனால், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாகப் பதிவு செய்யவில்லை. பலரும் தேவை கருதி இடைநடுவில் சென்றது போலவே குறித்த கட்சி உறுப்பினரும் சென்றிருந்தார்.

கூட்ட இறுதியில் பொது கட்டமைப்பும் தெரிவு செய்யப்பட்டது. குறித்த செய்தி அறிக்கையிடலின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொண்டமையை ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன. இதுவே நடந்த சம்பவம்.

ஆனால், இதனை திரிவுபடுத்தி தாம் கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்ததாகவும் ஊடகவியலாளர்கள் தவறாகச் செய்தி பிரசுரித்துள்ளதாகவும் குறிப்பிட்டு மரணித்த மூத்த ஊடகவியலாளரது பெயரையும் உள்ளீர்த்து மாவட்ட ஊடகவியலாளர்களை அந்த கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் ஒருவர் வசைபாடுவதை ஏற்க முடியாது. இது தமிழ் ஊடகவியலாளர்களை அடக்கி ஒடுக்க எடுக்கும் ஒரு முயற்சியாகவும் எம்மால் பார்க்க முடிகிறது.

நிறுத்த வேண்டும்

அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராகத் தமிழ் ஊடகவியலாளர்கள் போராடி வரும் நிலையில் தமிழ்த் தேசியம் சார்ந்து இயங்கும் கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர் இவ்வாறு நடந்து கொண்டமை எம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பில் கட்சித் தலைமைக்கு ஊடக அமையம் தெரியப்படுத்த முயன்ற போதும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை .

எனவே, நிகழ்வின் போது நடந்த உண்மைத் தன்மையை அறியாது தமது கட்சி உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தமை தொடர்பில் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து, அந்த சம்பவத்தை மறைக்க ஊடகவியலாளரையும், மரணித்த மூத்த ஊடகவியலாளரையும் இழிவுபடுத்தும் விதமான இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதைக் கட்சியின் மாவட்ட தலைவர்கள் நிறுத்த வேண்டும் எனவும், இது தொடர்பில் கட்சித் தலைமை கவனம் செலுத்த வேண்டும் எனவும் வவுனியா ஊடக அமையம் கோருகின்றது.

 

 

-tw