மிரட்டல் விடுக்கும் அரசாங்கம் வேண்டாம்

மிரட்டல்களை விடுத்து எங்கள் விபரங்களை கோரும் அரசாங்கம் தேவையில்லை என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் சங்க உறுப்பினர்கள் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஒ.எம்.பி அலுவலகம் உருவாக்கப்பட்டதில் இருந்து இன்று வரைக்கும் எட்டு மாவட்ட சங்க தலைமையினாலும் உறுப்பினர்களாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒ.எம்.பி அலுவலகம் நேற்றுமுன் தினத்திலிருந்து(20.04.2023) கடிதங்கள் அனுப்பி பிள்ளைகளையும் வங்கி கணக்கு இலக்கமும் கொண்டுவர வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள்.

தமிழ் மக்களுக்கு மிரட்டல்

ஒ.எம்.பி அலுவலத்தின் நட்ட ஈடை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றார்கள். தமிழ் மக்களை மிரட்டி அவர்கள் வேலை செய்ய தேவையில்லை. ஒ.எம்.பி அலுவலகத்தினால் நிறைய இலாபம் இருக்கின்றபடியால் தான் தொடர்ச்சியாக எங்களுக்கு அழுத்தம் தருகின்றார்கள்.இன்னும் ஒரு வசனத்தினை பாவித்து மக்களை மிரட்டுகின்றார்கள்.

அதாவது மூன்று முறை அறிவித்தும் ஒ.எம்.பி அலுவலகத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை நான்காவது முறை நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி அறிவித்து வருகின்றார்கள்.

அந்த சட்ட நடவடிக்கை என்ன என்பதை எங்களுக்கு பகிரங்கமாக தெரியவேண்டிய தேவை இருக்கின்றது. எங்களை பயமுறுத்தி விபரத்தினை எடுக்கவேண்டும் என்றால் அவ்வாறன அரசாங்கமும் தேவையில்லை ஒ.எம்.பியும் தேவையில்லை.

அவ்வாறன வெளிநாட்டுக்காரர்களின் அழுத்தமும் தேவையில்லை நாங்கள் எங்கள் உயிர் இருக்கும் மட்டும் போராடுவோம். எங்கள் போராட்டத்திற்கான புதிய சட்டத்தினையும் அவர்கள் கொண்டுவந்துள்ளார்கள்.

உயிர் இருக்கும்வரை போராடுவோம்

அதாவது பயங்கரவாத தடைச்சட்டத்தினை எடுத்து இன்னொரு சட்டத்தினை கொண்டுவந்து 24 மணித்தியாலங்கள் அனுமதியின்றி விசாரணை செய்யலாம். எங்களை துன்புறுத்தலாம் என எச்சரிக்கின்றார்கள்.காணாமல் போன உறவுகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நீதி வழங்கவேண்டும் என்று இன்று வரை போராடி வருகின்றோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஊடக சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் சங்க தலைவி ம.ஈஸ்வரி, செயலாளர் பிராபாகரன் றஞ்சனா, நிர்வாக உறுப்பினர் சு.பரமானந்தம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

-tw