அரசாங்கம் புத்தசாசனத்தைப் பேணிப்பாதுக்காக்க கடமைப்பட்டுள்ளது என்ற வகையில், மகா சங்கத்தின் தலைமையிலான அனைத்து பீடங்களையும் வலுவூட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
ராமன்ய மகா பீடத்தின் 73ஆவது “உப சம்பதா” நிகழ்வு தொடர்பில் அதிபர் அலுவலகத்தில் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உப சம்பதா நிகழ்வு
இரு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் “உப சம்பதா” நிகழ்வு எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் மாத்தளை ஸ்ரீ சங்கபோதி பிரிவெனாவை மையப்படுத்தி மகாவலி கங்கையின் கிளை நதியான சுதுகங்கையை அண்மித்து அமைக்கப்பட்டுள்ள சீமாமாலகய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளார்.
13 ஜூன் 1863 காலி ஆற்றின் உடகுக்கேபா எல்லையில் தொடங்கிய உபசம்பதா நிகழ்வுடனேயே ராமன்ய பீடம் ஆரம்பிக்கப்பட்டதோடு, 160 வருடங்களாக இந்நிகழ்வானது அரச அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-ib