இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: ரணில்

பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபட்டு நாட்டை பற்றி புதிதாக சிந்தித்து புதிய பாதையில் பயணிக்கும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை மாற்றுவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

2048 இலங்கையின் அபிவிருத்திக்கான ஆண்டாகும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்தப் பயணத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் கைகோர்ப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தினூடாக உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“2048 வெல்வோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மேதிக் கொண்டாட்டத்தில் 68 பல்வேறு தொழில்சார் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஆசியாவின் இரண்டாவது வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையை கட்டியெழுப்பிய டீ.எஸ். சேனாநாயக்கவினதும் திறந்த பொருளாதாரத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்ற ஜே.ஆர். ஜயவர்தனவினதும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இலங்கை மீளக் கட்டியெழுப்பப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் நாட்டைப் பற்றி சிந்திக்கும் அதேவேளை கொள்கை அரசியலிலும் ஈடுபடும் கட்சி என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, ஒருபோதும் அந்தக் கொள்கையில் இருந்து விலகவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் அரசியல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற இளைஞர்களின் கோரிக்கையை சற்றும் மறந்துவிடவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் மேற்பார்வைக் குழுக்களுக்கு தலா ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்கும் பணி இம்மாதம் நிறைவடையவுள்ளது. கரு ஜயசூரியவின் பிரேரணையின் பிரகாரம் மக்கள் சபை தொடர்பான வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடன், நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உடன்பாட்டு இந்த ஆண்டு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அக்கட்சியை ஆதரிக்கும் உங்கள் அனைவருக்கும் உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கடந்த 03 தசாப்தங்களாக நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்த நேரத்தில் நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றேன். நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்து, உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததோடு, மக்கள் வீதிகளுக்கு இறங்கியிருந்தனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டின் ஜனநாயக கட்டமைப்பையும், பாராளுமன்றத்தையும் சிதைக்க சிலர் முயன்றனர். இன்று நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளது. உணவுத் தட்டுப்பாடு இல்லை. மேலும் நாட்டில் ஜனநாயக கட்டமைப்பு செயல்படுகிறது. அச்சுறுத்தல்கள் இன்றி பாராளுமன்றம் செயல்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய பணியை தடையின்றி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்க முன்னர், ஒரு விடயத்தைப் பற்றி சிந்தித்தேன். ஐக்கிய தேசியக் கட்சி நாட்டைப் பற்றி சிந்திக்கும் கட்சி. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு கொள்கை அரசியலில் இருக்கும் கட்சி. நாங்கள் அதனை விட்டுவிலகவில்லை. சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வது அவசியம், உலக வங்கியின் உதவி தேவை. நாம் 07 பில்லியன் டொலர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் 2020 தேர்தல் விஞ்ஞாபனத்தில், அன்று நாம் குறிப்பிட்டிருந்தோம். கட்சி என்ற வகையில் நாங்கள்தான் அந்த உண்மைகளை குறிப்பிட்டோம். மற்ற அனைவரும், பொருளாதார பிரச்சினை இருப்பதை அறிந்து, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

அதன் விளைவு என்ன, உண்மையைக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி இறுதியாக தேசியப்பட்டியலில் வீழ்ந்தது. கசப்பானாலும் உண்மையை மக்களுக்குச் சொல்வதே எங்களின் கொள்கையாகும். அதனால் நாங்கள் அதிலிருந்து பின்வாங்கவில்லை. 2020 மற்றும் 2021 இலும் எங்களின் இலக்கு அறிவிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு, இந்தப் பிரச்சினை தீவிரமடைந்தபோது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கினேன். இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த போது எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்கள் கலந்துரையாடலை புறக்கணித்த போதும் நானும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்க்கட்சியில் இருந்து கலந்து கொண்டோம்.

எனது முயற்சி அரசியல் அல்ல, நாட்டின் பொருளாதாரத்தை முறையாகக் கையாள்வதும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும் ஆகும். எனவே நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பலம் என்னிடம் இருப்பதாகவும், எனக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட்டு அந்த பெறுபேறுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையினால் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

அந்த நம்பிக்கை எனக்கு இருந்ததற்கு முக்கிய காரணம், 2001 இல் அரசாங்கம் கவிழ்ந்தபோது, பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த முடிந்ததுதான். 2015 இல், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், முதன்மை வரவு செலவுத்திட்ட மேலதிகத்தைப் பெறவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

எனவே, இந்தப் பொருளாதார நெருக்கடியை என்னால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அப்படியானால், இந்த நேரத்தில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதோடு, அரசியல் ஸ்திரத்தன்மையையும் உருவாக்குவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. தற்போது பாராளுமன்றம் இயங்கி வருகிறது. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின்படி செயல்படுபவர்கள் பலர் உள்ளனர். எனவே, இதற்கு எனக்கு உதவிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கும் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

 

-ad