தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்காது சட்ட சீர்திருத்தம் அமைய வேண்டும்

இலங்கை சட்ட ஏற்பாட்டில் நாற்பதுக்கும் அதிகமான சட்டங்கள் காணப்பட்ட போதிலும் வெறுமனே பதினாறு சட்டங்களே பயன்பாட்டில் உள்ளன. வேலைத்தள பாதுகாப்பு கட்டளை சட்டம் போன்றவை காலாவதி ஆகியுள்ளன.

ஆகவே சட்ட சீர்திருத்தம் இன்றி அமையாத காரணியாக உள்ள போதிலும் இச்சீர்திருத்தம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்காததாகவும் அமைய வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

புதிய தொழில் சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கான பொது மன்றத்தின் முதலாவது அமர்வானது தொழில் அமைச்சில் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாநயக்கார தலைமையில் இடம்பெற்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழில் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. அதுமட்டுமன்றி எமது பொது செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்திலும், குழுநிலை கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

அந்தவகையில் இலங்கை சட்ட ஏற்பாட்டில் நாற்பதுக்கும் அதிகமான சட்டங்கள் காணப்பட்ட போதிலும் வெறுமனே பதினாறு சட்டங்களே பயன்பாட்டில் உள்ளன.

ஆண்டொன்றிற்கு 316 பில்லியன் ரூபா வருமானத்தினை ஈட்டி தரும் பெருத்தோட்ட தொழித்துறை அதன் தொழிலார்களுக்கு ஏற்ற உரிமைகளையும் தொழில் பாதுகாப்பையும் வழங்குகின்றனவா என்பது கேள்விக்குறியகை உள்ளது.

அண்மையில் உலக வங்கி அறிக்கையின் படி பெருத்தோட்ட பகுதிகளில் ஏழ்மை வீதம் 50% ஆல் அதிகரித்துள்ளது. இன்று இத்தொழில்துறையின் தொழில் புரியும் தொழிலார்களின் வீழ்ச்சி 60% ஆக காணப்படுகிறது.

உரிமைகள் மீறப்படுதல்

இதன் அடிப்படையை உற்று நோக்குகையில் தொழிலாளர்கள் பல சுரண்டல்களுக்கு உட்படுத்தப்படுவதும், உரிமைகள் மீறப்படுவதும், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படாமையே முக்கிய காரணிகளாக காணப்படுகின்றன.

முதலாளிமார் சம்மெளனம் இதற்கு பல விளக்கங்களை வழங்கினாலும் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபா நிதி ஊழியர் நம்பிக்கை நிதி தொழில் பாதுகாப்பு என்ற பல சட்ட பாதுகாப்பை இழக்கின்றனர்.

இது தொடர்பாக 2019 ஆம் ஆண்டு தொடக்கம் ஜீவன் தொண்டமானும் நானும் முதலாளிமார் சம்மெளனத்திடம் ஒரு சீரான முறைமை திட்டத்தை கேட்டு வந்த போதிலும் அவர்களின் அசமந்த போக்கில் இன்று பல தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கபட்டுள்ளன.

அத்தோடு பெருந்தோட்ட தொழில்துறையில் ஏறத்தாழ 54 வீதம் பெண்களாக காணப்பட்ட போதிலும் அவர்களைப் பாதுகாக்கும் சட்டமூலங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

சட்டவாக்க உருவாக்கம்

எனவே சர்வதேச தொழிலாளர் 190 வது சரத்து உள்வாங்கப்படுவதுடன் அவர்களின் உரிமை மற்றும் நலன்புரி சார்ந்த விடயங்களிலும் சட்டவாக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அண்மையில் நான்கு தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது துர்பாக்கியமாக இறந்தமை நாம் அனைவரும் அறிந்ததே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை பீடம் தொழிலாளர்களுக்கு தேவையான நஷ்ட ஈட்டை நமது பலத்தை பயன்படுத்தி பெற்றுக் கொடுத்தது.

எனவே நவீன மயமாக்கல் என்னும் தொனிப் பொருள் பேசப்படும் போது அதன் பாதுகாப்பும் பேசப்பட வேண்டும். எனவே மேலும் இச்சட்ட சீர்திருத்தத்திற்கான அனைத்து முன்மொழிவுகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வழங்கும் எனவும் தொழிலாளர்களுக்கும் தொழில் வழங்குனர்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் தொழில் சட்டம் உருவாக்க நாம் என்றும் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் தொழில் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கையிலுள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதானி சிம்ரின் சிங்கும் கலந்துகொண்டுள்ளதோடுதொழில் சட்ட திருத்தங்கள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

-tw