தமிழர் விவகாரத்தில் அரசாங்கம் இரட்டைக்கொள்கையை கையாள்கிறது

இலங்கையில் தமிழர்கள் போரினால் வலிந்து காணாமல் போகச்செய்யப்பட்ட விடயம் தொடர்பிலும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விடயத்திலும் சிறிலங்கா அரசாங்கம் இரட்டைக்கொள்கையை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்தக் குற்றச்சாட்டை இன்று நாடாளுமன்றில் முன்வைத்தார்.

“சர்வதேச விசாரணை கோரப்படும்போது, சிறிலங்கா அரசாங்கம், நாட்டின் நீதிமன்றக்கட்டமைப்பு தொடர்பில் நம்பிக்கைக்குரிய விடயத்தை தெரிவித்து வருகிறது.

சர்வதேச நீதிமன்றம்

இலங்கையின் நீதித்துறை மூலம் இந்த விடயத்தை கையாளமுடியும் என்ற நிலையில் சர்வதேச நீதிமன்றம் இதற்கு அவசியமில்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது.

எனினும் இலங்கையின் கடற்பரப்பில் பாரிய சேதத்தை விளைவித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விடயத்தில், வழக்கை சிங்கப்பூர் நீதிமன்றில் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இதிலிருந்து ஏதோ ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் மறைக்கமுயல்கிறது என்றே சந்தேகம் கொள்ளவேண்டியுள்ளது. என குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் வழக்கு

இந்தநிலையில் சாணக்கியனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச,

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனமும் வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ள நிலையில், அதற்கு எதிராக இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்புக்குள் சட்டத்தை நடைமுறைப்படுத்தமுடியாது என்று சுட்டிக்காட்டினார்.

எனவேதான் குறித்த கப்பல் நிறுவனம் பதிவுசெய்யப்பட்டுள்ள சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கப்பல் நிறுவனத்தின் காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து இலங்கை கோரியுள்ள நட்டஈட்டை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற அடிப்படையிலேயே சிங்கப்பூரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார்.

 

 

-ib