தமிழ் மக்களை ஏமாற்றுவதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க குறியாக இருக்கின்றாரே தவிர தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்க தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகமான அறிவகத்தில் இன்று (13-05-2023) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில்
அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“அண்மையில் அதிபருடன் நடைபெற்ற சந்திப்பின் போது தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுகின்ற காணிகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்தோம்.
அந்த இடத்தில் தொல்லியல் திணைக்களமும் இருந்துள்ளது, அவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் எதிர்வரும் 18 ஆம் திகதி உருத்திரபுரம் சிவாலயத்தின் காணியை அளவீடு செய்வதற்கான கடிதங்களை ஆலய நிர்வாகத்திற்கு அனுப்பி இருக்கின்றது.
இவ்வாறு ஒரு புறத்தில் தமிழர்களுக்கு தீர்வை வழங்குவதாக தெரிவித்து பேச்சுக்களை நடத்திக்கொண்டு மறுபுறத்தில் இவ்வாறு காணி அளவீடுகளை செய்ய முனைவது என்பது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு செயலாகவே காணப்படுகின்றது.
நாடாளுமன்றில்
கடந்த 09 ம் திகதி நாடாளுமன்றத்தில் வடக்குக் கிழக்கிலே தமிழர்களுடைய வழிபாட்டிடங்கள் இடித்தளிக்கப்பட்டு புத்தர் சிலைகள் நிறுவுதல், விகாரைகள் அமைக்கப்படுகின்றன எனும் விடயத்தை நான் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.
அது தொடர்பாக விடயங்களை குறிப்பிட்டு, இடங்களையும் அடையாளப்படுத்தி ஒரு அறிக்கை சமர்ப்பித்திருந்தேன்.
உருத்ரபுரம் சிவாலயத்தை எதிர் வரும் 18 ஆம் திகதி அளவீடு செய்வது தொடர்பில் அறிவிக்கப்பட்டமை தொடர்பாக அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றேன்.
அதன் பிரதிகளை மாவட்ட அரச அதிபர் மற்றும் வடமாகான ஆளுநர், பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி இருக்கின்றேன்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக இருந்து கொண்டு நடத்த வேண்டிய தேர்தலை நடத்த விடாது அதனை தடுத்து வருகின்றார்.
எதை நிறுத்த வேண்டுமோ அதை நிறுத்துவதற்கு அவர் தயாராக இல்லை.
தமிழ் மக்களை ஏமாற்றும் விதத்திலேயே அதிபர் குறியாக இருக்கின்றாரே தவிர, தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்குவதற்கு தயாராக இல்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
-ib