முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை! பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி

ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், முள்ளிவாய்க்கால்நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு  பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.

பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் இன்றைய தினம் 18.05.2023 ஒன்று கூடி இந்நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (APPG-T)  குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கை உள்நாட்டு போர்

இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது,  நாடாளுமன்றத்தின் சுயாதீன உறுப்பினர்கள் மற்றும் கென்சர்வேடிவ் எனப்படும் பழைமைவாத கட்சி, தாராளவாத ஜனநாயக கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை உள்நாட்டு போரின் போது உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும், இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிடுதல், காணொளி காட்சிப்படுத்தல் மற்றும் கண்காட்சி என பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டதன் மூலம்,  தமிழ் சமூகத்தினருக்கான நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையில் அவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இனத்தவருக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு மறக்கப்படாது

போரின் முடிவில் முள்வேலி வதை முகாம்களில் இலங்கை ஆயுதப் படைகளால் தமிழர்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் காணொளி காட்சியை இந்த நிகழ்வில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் இனத்தவருக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு மறக்கப்படாது எனவும் அதற்கான நீதி கிடைக்கும் வரை உயிரிழந்தவர்களின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதற்கான அடையாளமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-tw