ஈழத் தமிழர்களுக்கு பொதுவாக்கெடுப்பு: தீர்மானத்தை முன்வைத்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களுக்கு ஜனநாயக ரீதியாக ‘பிரதிநிதித்துவம்’ மற்றும் ‘நீடித்த அமைதியான அரசியல் தீர்வுக்கு’ பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை அனுப்ப வலியுறுத்தி வரும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா ரோஸ் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் ஆகியோரினால் (18.05.2023) அன்று இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் போரின் இறுதி வாரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பலியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் ஒடுக்குமுறை

தமிழர் தாயகத்தில் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறை தொடர்வதாக இந்த தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.

6வது சட்டத்திருத்தம் தமிழர்கள் சுதந்திரம் கோரி குரல் கொடுப்பதைத் தடுக்கிறது. அத்துடன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவும் ஈழத் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை அங்கீகரிக்கவும் இந்த தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது ‘காணாமல் போனவை, துஷ்பிரயோகங்கள், இடம்பெயர்வுகள்’ மற்றும் ‘மனித உரிமை மீறல்களுக்கு இலங்கையின் தண்டனையின்மை’ ஆகியவற்றை இந்த தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் பதவி வகித்த குற்றவாளிகள்

2009 ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலை நடந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறத் தவறியதுடன் குற்றவாளிகளை முக்கிய அரசியல் பதவிகளுக்கு உயர்த்தியது.

மேலும் 2015 இல் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை 2020 இல் இலங்கை புறக்கணித்தது. ‘போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

சிறிய வழக்குகளில் கூட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை. அதேநேரம் சாட்சியங்கள் சேகரிப்பது அரசின் தன்னிச்சையான கைதுகள் மற்றும் அச்சுறுத்தல்களால் தடைபடுகிறது என்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா ரோஸ் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் ஆகியோர் முன்வைத்துள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

-tw