ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் சர்ச்சை கருத்து – பெண் அமைச்சர் உடனடியாக பதவி நீக்கம்

ஜப்பானிய தடுப்புக்காவல் நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் தவறான கருத்தினை வெளியிட்ட  ஜப்பானிய எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் அமைச்சர் ஒருவர் மேல் சபையின் நீதித்துறை விவகாரக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி என்ற இலங்கைப் பெண் 2021 ஆம் ஆண்டு மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்ததாக டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்திருந்தது.

இந்நிலையில், ஜப்பான் மேல் சபையின் அமர்வில் உரையாற்றிய பெண் எம்.பி ஒருவர் சந்தமாலியின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மரணத்திற்கான காரணம்

2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பான் சென்ற விஷ்மா சந்தமாலி, விசாவைக் காலம் முடிந்தும், ஜப்பானில் தங்கியிருந்தமைக்காக, 2021 ஜனவரி முதல், தடுத்து வைக்கப்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 6 ஆம் திகதியன்று உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், ஜப்பான் எதிர்க்கட்சி உறுப்பினர் Mizuho Umeimura, குடியேற்ற கட்டுப்பாடு மற்றும் அகதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான  மசோதா மீதான குழு விவாதத்தில், யாரோ ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு விஷ்மா சந்தமாலி உயிரிழந்ததாக கூறியிருந்தார்.

இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன், இதனை தொடர்ந்து மேல்சபையின் நீதித்துறை விவகாரக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு எதிர்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-tw