முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையை கனேடிய பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ மீளப்பெற வேண்டுமென வலியுறுத்தி கொழும்பில் போராட்டத்துக்கு அப்பால்பட்ட தேசிய அமைப்பினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குகளை தலைமையாக கொண்ட இந்த அமைப்பு, கொழும்பில் உள்ள கனடா உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தது.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நினைவு கூரும் வகையில் கனேடிய பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ கடந்த 18 ஆம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் பல எதிர்ப்புக்கள் எழுந்திருந்த பின்ணணியில், தற்போது போராட்டத்துக்கு அப்பால்பட்ட தேசிய அமைப்பு அவரது அறிக்கையை எதிர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டது மனிதாபிமான நடவடிக்கை எனவும் இனப்படுகொலை இல்லையெனவும், ஜெஸ்ரின் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்த கூடாதெனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென போராட்டத்துக்கு அப்பால்பட்ட தேசிய அமைப்பு தலைவர் பலாங்கொட கஸ்யப்ப பிக்கு வலியுறுத்தியுள்ளார்.
-ib