மலையக மக்களுக்கு எதிரான போலி பிரச்சாரத்தை பரப்ப வேண்டாம்

சமூக பாதுகாப்பு உதவி திட்டங்களில் இருந்து மலையக மக்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் இன்றையதினம் (22.05.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இம்முறை உரிய வகையிலேயே பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உதவி திட்டங்களை பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் அது கிடைக்கும். சமுர்த்தி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு நிதி உதவிகளின் போது மலையக சமூகம் ஓரங்கட்டப்படுகின்றது.

அவர்களின் பெயர்கள் நிராகரிக்கப்படுகின்றன என்ற பிரச்சாரத்தை எதிரணிகள் சில முன்னெடுத்து, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.

பாகுபாடு காட்டப்படவில்லை

முன்னர் இந்த குறைபாடு இருந்திருக்கலாம் ஆனால் இம்முறை எவருக்கும் பாகுபாடு காட்டாமல் அதிகாரிகள் நேரில் சென்று தகவல்களை திரட்டியுள்ளனர்.

15 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையக தமிழர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர்வரை பெருந்தோட்டங்களில் தொழில் புரிகின்றனர்.

இவர்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களை முறையாக அடையாளம் காணவேண்டும். மாறாக முழு சமூகத்தையும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சமூகமாக அடையாளப்படுத்த முற்படுவது, அந்த சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும்.

நுவரெலியா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேரில், 85 ஆயிரம் பேர் வரை பெருந்தோட்டப்பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என தெரவித்துள்ளார்.

 

 

-tw