இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையிடம் நீதி கோரி வெளிநாட்டவர்கள் போராட்டம்

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு அகதிகள் தமக்கு எந்த நாட்டிலும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு கோரி கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த செவ்வாய்கிழமை(23.05.2023) ஒன்றுகூடி வெளிநாட்டு அகதிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அகதிகளாக பதிவு

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் அகதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளவர்களும் புகலிடக் கோரிக்கையை முன்வைத்தவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் தங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை குறைத்து கொழும்பில் உள்ள ஐ.நா அகதிகள் அலுவலகம் மூடப்படும் என தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள பல பாகிஸ்தானிய குடும்பங்கள், நிரந்தர பதிவினை விரைவுபடுத்துமாறும், வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளன.

அவர்களின் கைகளில் ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் எழுதப்பட்ட, “அகதிகளை மரணத்திற்கு திருப்பி அனுப்பாதீர்கள், அகதிகளும் மனிதர்களே” என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் காணப்பட்டன.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

இது தொடர்பில் சமூக மற்றும் அமைதி மையத்தின் மனித உரிமை ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,“பாகிஸ்தான், மியன்மர், ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன், நைஜீரியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 800 பேர் அகதிகளாக இலங்கையில் தங்கியுள்ளனர். அவர்கள் சட்ட ரீதியாகவே இலங்கையில் உள்ளனர். அந்த நபர்களுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமே பொறுப்பு.

இரண்டு முதல் 10 வருடங்கள் வரை, வெளிநாட்டு அகதிகளாக அவர்கள் நீர்கொழும்பு, பாணந்துறை, தெஹிவளை மற்றும் கல்சிசை ஆகிய இடங்களில் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மியன்மாரில் பௌத்த இராணுவ ஆட்சியில இருந்து தப்பிய ரோஹிங்கியாக்கள்.

இன்னும் சிலர் பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் இருந்து தப்பிய கிறிஸ்தவ மற்றும் பிற சிறுபான்மை இஸ்லாமிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

அரசியல், மத மோதல்கள் மற்றும் போர்களின் விளைவாக, அவர்கள் பிறந்த நாடுகளிலிருந்து தப்பிய மக்கள், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தால் தற்காலிகமாகப் பதிவு செய்யப்பட்டு அவர்களின் உறுப்பு நாடுகளில் குடியேற்றப்பட்டு, பின்னர் தெரிவு செய்யப்பட்ட நாட்டில் நிரந்தர குடியிருப்புக்கு அனுப்பப்படுகிறார்கள். இவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை கிடைக்கவில்லை.

எதிர்காலத்தில் மேலும் குறைப்புகள் ஏற்படுமா என்ற சந்தேகம் இவர்கள் மத்தியில் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் வெளிநாட்டு அகதிகளின் கோரிக்கை

இலங்கையில் வாழும் வெளிநாட்டு அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் மற்றும் மருந்தாளர்களாக காணப்படுகின்ற போதிலும் அவர்களுக்கு இலங்கையில் வேலை செய்யும் உரிமை இல்லை.

பாடசாலை செல்லும் வயதில் உள்ள சிறுவர்கள் கல்வியை இழந்துள்ளதால், அவர்களை விரைவில் நிரந்தர குடியிருப்பாளர்காக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வேண்டும் என போராட்க்காரர்கள் கோரியுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்புப் போரினால் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து பல வருடங்களாக இந்தியா, நேபாளம், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

 

 

-tw