கடந்த நான்கு மாதங்களில் இலங்கை தேயிலை உற்பத்தி 20 வீதம் குறைவு

இரசாயன உரத் தடை மற்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், 2023இன் முதல் நான்கு மாதங்களில் இலங்கையின் தேயிலை உற்பத்தி 20 வீதம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கடந்த மூன்றாண்டுகளில் குறைந்த அளவான 84 மில்லியன் கிலோகிராம் உற்பத்தி மாத்திரமே கிடைத்ததாக அதிகாரி ஒருவரை கோடிட்டு ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இரசாயன உரத்தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்ட போதிலும், போதுமான உரத்தை இறக்குமதி செய்வதற்கு சில மாதங்கள் கடந்துவிட்டதாக தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உற்பத்தி வீழ்ச்சி

இப்போது சந்தையில் போதுமான உரம் உள்ளது. எனினும் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

2021இல் 1,500 ரூபாயாக இருந்த 50 கிலோகிராம் உர மூட்டை இப்போது 20,000 ரூபாயாக விற்பனையாகிறது.

ஏனைய இடுபொருள் செலவுகளும் நான்கு மடங்காக உயர்ந்துள்ளன, இவையே உற்பத்தி வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாக பெருந்தோட்ட முதலாளிமார் சங்கத்தின் பேச்சாளர் ரோஷன் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

2021 ஜனவரி முதல் ஏப்ரல் வரை, இலங்கை 104.5 மில்லியன் கிலோகிராம் தேயிலையை உற்பத்தி செய்தது.

எனினும் அதே காலப்பகுதியில் இந்த ஆண்டு இந்த உற்பத்தி 84 மில்லியன் கிலோகிராமாக குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

-tw