இலங்கைக்கு தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்த இந்திய நிறுவனத்தில் சோதனை

இலங்கைக்கு தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்த இந்திய மருந்து நிறுவனம் தொடர்பில் மத்திய மருந்து தர நிர்ணய ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘இந்தியானா’ குஜராத்தில் வழங்கிய கண் கோளாறுகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்தினால் இலங்கையில் சுமார் 30 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசு, தமது அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தை விசாரணைக்கு அழைத்த இந்திய மருந்து ஏற்றுமதி கவுன்சில், சம்பவம் குறித்து உள் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

குற்றச்சாட்டை மறுக்கும் இந்தியானா

அதேசமயம் பாதுகாப்பு நடவடிக்கையாக, சர்ச்சைக்குரிய மருந்தின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தவும், வழங்கப்பட்ட மருந்தின் இருப்பை திரும்பப் பெறவும் இந்திய நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை கடந்த ஓராண்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் தொடர்பாக நான்காவது முறையாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது, இந்தியாவில் மருந்து ஏற்றுமதி துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்நாட்டு மருந்து ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்துள்ளது.

எனினும், பலவீனமான மருந்துகளை இலங்கைக்கு வழங்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டை “இந்தியானா” மருந்து நிறுவனம் மறுத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

-jv