முன்னாள் போராளிகளுக்குரிய உதவியை விமர்சிப்பது சந்தர்ப்பவாத அரசியல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னாள் போராளிகளை வைத்து சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்வதாக ஜனநாயக போராளிகள் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

தமது அரசியலுக்காக முன்னாள் போராளிகளை குறித்த தரப்பினர் பயன்படுத்துவதாகவும் அந்தக் கட்சியின் செயலாளர் இ. கதிர் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி விமர்சித்த நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொய்யான மாயை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளுடைய அரசியல் அணியின் தொடர்ச்சியாக எந்த அணிகளையோ அல்லது தாயகத்தில் இருந்த அரசியல் கட்சிகளையோ தலைமை நியமிக்கவில்லை. அவர்களிடம் எந்தப் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் இயங்குகின்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணியினர் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட ஒரு மாத காலப்பகுதிக்குள்ளேயே தமிழ் தேசிய பரப்பிலிருந்து வெளியேறிச் சென்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியென பொய்யான மாயையை மக்கள் மத்தியில் காட்டிக்கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்று பொய்யான ஒரு கட்சியை உருவாக்கிக்கொண்டு இன்று தமிழ் தேசிய அரசியல்வாதிகளாக செயற்படுகின்றார்கள்.

ஆனால், இவர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

விடுதலைப் புலிகளுடைய வரலாறு என்பது மிகவும் கனதியானது. அவர்கள் நெருப்பாற்றை நீந்திக் கடந்து வந்தவர்கள். அந்த விடயங்களை நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அவர்களிடம் நாங்கள் பல தடவைகள் கூறி இருக்கின்றோம். ஆனால் இன்றும் அவர்கள் இந்த விடயத்திலே மீண்டும் மீண்டும் தலையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பல கோடிகளை மோசடி

உண்மையிலேயே இந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணியினர் வெளிநாடுகளில் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களை காரணம் காட்டி பல கோடிகளை மோசடி செய்து அதனை போராளிகளுக்கும் மக்களுக்கும் வழங்காது தங்களது சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தியுள்ளனர்.

போராளிகளை விடுதலைப் புலிகளின் தலைவர் கீழ்த்தரமான நிலையில் வளர்க்கவில்லை. தனித்துவமான முறையில் தங்களது பொருளாதார நிலைமையை வளர்த்துக் கொள்வதற்கான அடிப்படைகளையும் தலைவர் கொடுத்திருக்கின்றார். அரசியல்வாதிகளிடம் கையேந்த வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கக் கூடாது என்பது தலைவருடைய சிந்தனையாக இருந்தது.

ஐபிசி தமிழின் போன்ற உறவுபாலம் நிகழ்ச்சி, புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற மக்களுடைய உதவித் திட்டங்கள் போன்ற பல வகையான விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம்.

பலவீனமான நிலைப்பாடு

உண்மையாக போராளிகளை நேசிக்கின்றவர்களும் தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவர்களும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கிறார்கள். அந்தத் திட்டங்களை நாங்கள் தொடர்ச்சியாக வரவேற்போம்.

ஆனால் இவர்களைப் போன்று கீழ்த்தரமாக போராளிகளை சித்தரிப்பது, அவர்களது பலவீனமான நிலைப்பாடுகளை வெளியிலேயே காட்டுவது, போராளிகளுக்கு மதிப்பளிக்காது அவர்களை கொச்சைப்படுத்துவது போன்ற விடயங்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்றார்.

 

 

-ib