நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 வீத பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கச் சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் நடைபெற்ற 2023/ 2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிவிக்கையில்,
சட்டம் மற்றும் ஒழுங்கு, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதால் நெருக்கடியிலிருந்து இலங்கை முற்றாக மீண்டுவிட்டது என்று கருத முடியாது.
இந்தச் செயன்முறையின் வெற்றிக்கு எதிர்காலத்தில் பாரிய அர்பணிப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
வலுவிழந்த நாடு
கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக இலங்கை முன்னொருபோதும் காணாத பொருளாதார நெருக்கடியைக் கண்டது அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளைத் நாங்கள் முன்னெடுத்திருந்தோம்.
“தேசிய சட்ட மாநாட்டில் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் பற்றி ஆராயப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதற்காக நுவரெலியா தெரிவு செய்யப்பட்மையும் பொருத்தமானது என்று கருதுகின்றேன்.
கடந்த 10 – 11 மாதங்களுக்கு முன்பாக வலுவிழந்த நாடாக மாறிவிடும் வகையிலான நிலைமைகளைக் கடந்து வந்துள்ளோம். எவ்வாறாயினும் தற்போது சட்டம் – ஒழுங்கு , அரசியல் – பொருளாதார ஸ்திரத்தன்மையும் உருவாகியுள்ளது.
நீண்ட தூர பயணம்
இந்த நிலைத் தன்மை குறுகிய காலத்துக்குரியது என்பதால் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை உணர வேண்டும். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை நாம் அர்பணிப்புடன் முன்னெடுத்திருந்தாலும் நாடு நெருக்கடியிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டது என்று கூற முடியாது.
தற்போதும் பெரும்பாலான பொதுமக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.
மேலும் நாடாளுமன்றம், நீதிமன்றம், ஊடகம், தனியார் துறை,தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள், நமது நாட்டின் பொதுமக்கள் மற்றும் அரச நிர்வாகக் கட்டமைப்பு மீதான நம்பிக்கையையும் முற்றாக இழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
-tw