தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்புக்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.
இதன்படி கனடாவில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான ரோய் சமாதானம், அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ச ஆகியோர் அட்டமஸ்தானாதிபதி மகாநாயக்க தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரரைச் சந்தித்து தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தேவை
நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலங்களில் பெருமளவு மக்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தேவை காணப்படுகிறது.
அத்துடன் மீண்டும் அதுபோன்ற யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அனைவரும் சமாதானமாக வாழ்வதற்காக தேவையான சூழலை உருவாக்குவது மற்றும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது ரோய் சமாதானம் (Roy Samathanam) கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த மகாநாயக்க தேரர் கலாநிதி பல்லேகம ஹேமரத்ன தேரர், நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அரசர் காலம் தொட்டே மகாநாயக்க தேரர்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு
அனைத்து மதங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வரவேற்கும் வெளிநாட்டில் வாழும் அனைத்துத் தரப்பினரும் நல்லிணக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென தாம் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-ib