திருடர்களை நம்பியிருக்கும் ஒரு தலைவரால் திருடர்களை பிடிக்க முடியாது

தற்போதைய அதிபரால் திருடர்களைப் பிடிக்க முடியாவிட்டாலும், அந்தத் திறன் ஐக்கிய மக்கள் சக்திக்கு உண்டு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஒரு விடியலின் ஆரம்பம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராம மோடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

220 இலட்சம் மக்களால் அல்ல, நாட்டின் வளங்களை அபகரித்த ராஜபக்ச ஆட்சியினாலே நாடு திவாலாகியுள்ளது எனவும், திருடர்களை நம்பியிருக்கும் ஒரு தலைவரால் திருடர்களை பிடிக்கும் பணியை செய்ய முடியாது எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

பண்டோரா பேப்பர்

அத்தோடு, நாடு திவாலாகும் நிலையில் இருந்து மீள்வதற்கு எளிதான வழி கமிஷன், லஞ்சம் என கொள்ளையடித்த பணத்தை மீட்பதுதான், எனவே பண்டோரா பேப்பர்களில் குறிப்பிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான டொலர்களை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அந்த பணத்தை நாடு பெற விரும்புவதாகவும், ஆனால் திருடர்களால் உருவாக்கப்பட்ட அதிபரின் அடித்தளம் நாட்டை அழித்த ராஜபக்ச குலத்தையும் அவர்களின் விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதுகாப்பதே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

-tw