இலங்கைக்கு செல்ல அனுமதியுங்கள் -மோடிக்கு சாந்தன் கடிதம்

விடுதலை செய்யப்பட்ட பின்னரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை சொந்த நாடான இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு சாந்தன், இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் திருச்சியில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் தங்கியுள்ள சாந்தன், தான் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் முகாமில் வைக்கப்பட்டிருப்பதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். முதலில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு அடுத்து, சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரோபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ரோபர்ட் பயஸ் ஆகிய நால்வரும் இலங்கையை சேர்ந்தவர்களாவர். இதன் காரணமாக விடுதலை செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் அவர்கள் நால்வரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் யார் இரத்த உறவு

இந்த நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி தற்போது ஒரு அறையில் கைதி போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி சாந்தன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த முகாமில் இரத்த உறவுகளை மட்டுமே சந்திக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தம்மை போன்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு இந்தியாவில் எவ்வாறு இரத்த உறவுகள் இருக்க முடியும் எனவும் சாந்தன் தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

-tw