உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய நடவடிக்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த யோசனை குறித்து அரச தரப்புகளில் கலந்துரையாடப்பட்டதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் இவ்விடயம் விரிவாக ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால், வேட்புமனுக்களை இரத்து செய்துவிட்டு அடுத்த தேர்தலுக்கான வேட்புமனுவை மீண்டும் அறிவிப்பதே சிறந்தது என ஆலோசனைக் குழுவில் கலந்துகொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அமைச்சர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

80,672 வேட்பாளர்கள்

இதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,711 வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் வேட்புமனுக்கள் கோரப்பட்டு, 80,672 வேட்பாளர்கள் தமது பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கமைய 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளுக்கு குறித்த வேட்பாளர்கள் போட்டியிடயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

-tw