வடக்கு கிழக்கில் தமிழர்களின் வாக்குகளுக்காக இராணுவத்தைப் பலவீனப்படுத்த முயற்சி

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தனக்கு தோன்றுகிறது என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இராணுவம் கையகப்படுத்திய தமிழ் மக்களின் காணிகளை மீளக் கையளிக்க வேண்டும்.

சரத் பொன்சேகாவின் நிலைப்பாடு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்த காலங்களில் இராணுவ தேவைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இடங்களை தெரிவுசெய்யாது அவற்றை மீளக் கையளிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து இருக்க வேண்டும். ஒரு நாட்டுக்கு இராணுவம் தேவை. இராணுவத்துக்கு இராணுவ முகாம்கள் அவசியம். இலங்கை முழுவதும் இராணுவத்தினர் இருக்க வேண்டும்.

ஆனால் தேர்தலில் வடக்கு கிழக்குக்கு தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எமக்கு தோன்றுகிறது. இதனை முழுமையாக எதிர்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் இராணுவ பிரசன்னம்

இதேவேளை, கிளிநொச்சி நகரில் உள்ள 40 வீதமான காணிகள் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் வசம் உள்ள நிலையில், நகரத்தின் அபிவிருத்தி குறித்துப் பேசுவதில் எந்தவிதமான பயனும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்திருக்கிறார்.

இராணுவ பிரசன்னமும் – இராணுவ ஆக்கிரமிப்பும் கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு இடையூறாகவே அமைந்திருக்கிறது. எனவே இவ்வாறான நிலங்களை விடுவிப்பதன் மூலமே மாவட்டத்தின் அபிவிருத்தியை தீர்மானிக்க முடியும் என அவர் நேற்றைய தினம் கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

-ib