இலங்கையின் தேசிய மொழியாக மாறப்போகும் ஆங்கிலம்

ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் உட்பட அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஆங்கில மொழியினை மட்டுமல்ல சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

ரணில்

அதேசமயத்தில், நாட்டிற்குள் 2050 ஆம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையை உருவாக்குவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதற்கான முதன்மைக்காரணி மனித வளம் என வலியுறுத்திய அதிபர், மனித வளத்தை தயார்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களை சார்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டிற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்திலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

 

 

-ib