இலங்கையின் இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆணைக்குழு தொடர்பான வரைபானது அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இராஜதந்திர சமூகத்துடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பகிர்ந்துகொள்ளப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணை
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களும் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.
எனினும் இதற்கு தொடர்ச்சியாக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுவரும் சிறிலங்கா அரசாங்கம், இந்த விசாரணைகள் உள்ளக ரீதியிலேயே முன்னெடுக்கப்படும் என்பதுடன், அதற்கென தென்னாபிரிக்க மாதிரியை பின்பற்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
இந்த நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான வரைவுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தவுடன், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அது செயற்பாட்டுக்கு வரும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
53 ஆவது அமர்வு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவதுஅமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து இன்றைய தினம் வாய்மூல அறிக்கை ஒன்றை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ib