அனைத்துலக அகதிகள் நாளை(ஜீன் 20 )முன்னிட்டு கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர் ஒருவரின் ஆதரவுடன் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி ஈழ அகதிகள் முகாமில் தாய் அல்லது தந்தையரை இழந்த 101 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று(20) மாலை 5 மணிக்கு முகாம் தலைவர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக ஈழ அகதிகளின் உரிமைக்காக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி, அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் மற்றும் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக அர்ப்பணிப்புடன் குரல் கொடுத்து வரும் சென்னையில் வசிக்கும் ஈழத் தமிழரான மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் , சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பார்வேந்தன், பன்னாட்டுச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பெண்கள் சிறுவர்களின் உரிமைக்காக பணியாற்றிவரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்வி உள்ளிட்டடோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி வைத்து உரையாற்றினார்கள்.
நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு பிரமுகர்களும் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்கள்.
கல்வி என்ற ஆயுதம்
குறிப்பாக சர்வதேச அகதிகள் தினத்தின் முக்கியத்துவம் தொடர்பில் பிரமுகர்கள் எடுத்துரைத்ததோடு, முக்கியமாக தமிழக முகாம்களிலே வசிக்கும் ஈழத் தமிழர்களின் குடியுரிமை தொடர்பில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்கு தமிழக அரசு முழுமையாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
அத்தோடு கல்வி என்ற ஆயுதம் மூலமே மூடப்பட்ட இந்த அவல வாழ்க்கையிலிருந்த எமது தலைமுறையினர் எழுந்து வர முடியும் என்று பிரமுகர் ஒருவர் ஆற்றிய உரையானது மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் அமைந்திருந்தது.
இந்த நிகழ்விற்கு மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்குவதற்கு கனடாவில் வசிக்கும் ஊடகப்பரப்பில் தனது பெயர் குறிப்பிடவிரும்பாத நண்பரின் பெயரையும், அவரின் சமூக உணர்வு குறித்தும் சண் மாஸ்டர் தகவல் தெரிவித்தபோது உதவி திட்டத்தை பெற்றுக் கொண்ட மாணவர்களும், விருந்தினர்களும் கைகளை தட்டி தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள்.
நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
மேலும் இந்த நிகழ்வை பதிவு செய்வதற்காக சில ஊடகவியலாளர்கள் நிகழ்வில் கலந்து கொள்ள இருந்த சூழலில் நிகழ்ச்சி நடக்கும் முகாமுக்குள்ளே ஊடகவியலாளர்கள் ஒருவரையும் அனுமதிக்க முடியாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்ததால் இறுதி நேரத்தில் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-jv