இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக ஜனாதிபதியொருவர் தமிழ் பௌத்தம் பற்றிய உரையாடலைத் தொடக்கி வைத்திருக்கிறார்.
சமீபத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்லியல் திணைக்கள பணிப்பாளருக்கு அளித்த விளக்கமொன்றிலிருந்து தமிழ் பௌத்தம் பற்றி அதிக பேச்சுக்களை தெற்கிலும், வடக்கிலும் கேட்கமுடிகிறது.
வழமைபோல ரணில் சத்தமாக தும்மினாலே தமிழர்களுக்கு தமிழீழத்தைக் கொடுக்கப்போகிறார் என்கிற மாதிரி இனவாதக் கூக்கிரலிடும் மத வழிநடத்துநர்களும், அரசியல்வாதிகளும் இந்த விடயத்தில் அரசியல் செய்யத் தொடங்கிவிட்டனர்.
சில சிங்கள பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், இணையதளங்களும் தமிழ் பௌத்தம் குறித்த விடயத்தை இனவாத நோக்கில் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதில் இரவுபகலாக உழைக்கின்றன.
அது ஒரு புறமிருக்கட்டும். தொல்லியல் திணைக்களத்தின் மீதும், அது வடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் குறித்தும் விசனமும், விமர்சனமும், போராட்டங்களும் அதன்வழியே சர்வதேச கவனமும் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், ஜனாதிபதியொருவர் தமிழ் பௌத்தம் பற்றி கதைத்திருப்பது ஆழமான அரசியல் நோக்கத்தைக் கொண்டது. இந்தத் திடீர் ஞானத்தின் வழியே ஜனாதிபதி செய்திருக்கும் அரசியல் இதுதான்.
வடக்கு, கிழக்கில் அதிகரித்திருக்கும் பௌத்த விகாரைகள் சிங்களவர்களுக்குரியதல்ல. போராட்டக்காரர்கள் சொல்வதுபோல அதன் பின்னால் சிங்களமயமாக்கல் – பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் எதுவும் இல்லை. தமிழர்கள் வழிபட்டுவந்த பௌத்த விகாரைகளே மீள அமைக்கப்பட்டிருக்கின்றன.
எனவே அவை தமிழ் பண்பாட்டோடு இணைத்துப் பார்க்கப்படவேண்டியவையே தவிர – பாதுகாக்கப்படவேண்டியவையே தவிர எதிர்க்கப்படவேண்டியவை அல்ல. ஏற்கப்படவேண்டியவை.
இத்தகையதொரு நல்லிணக்க அரசியலை தமிழர்கள் மத்தியிலும், கடன்தருநர்கள் மத்தியிலும் கொண்டுசெல்லவே வடக்கு, கிழக்கில் தமிழ் பௌத்தம் பற்றிய உரையாடல்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன. இதுவும் நம்மை நோக்கி வந்திருக்கும் ஆபத்துத் தான்.
ஏற்கனவே அமைக்கப்பட்டவைக்கும், இனி அமைக்கப்படவுள்ளவைக்குமான இலகுவான நியாயப்படுத்தல்தான். இந்த ஆபத்தை எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம். இந்த நியாயப்படுத்தலில் இருக்கும் அநியாயத்தை எப்படி வெளியில் சொல்லப்போகிறோம்.
வடக்கு, கிழக்கு பாகங்களில் தமிழ் பௌத்தம் இருந்ததா? ஆம் இருந்தது உண்மைதான். வடக்கு, கிழக்கில் பல இடங்களில் பௌத்த விகாரைகள் இருந்திருக்கின்றன.
கௌதம புத்தரது சிலைகள் இருந்துள்ளன. அவை கட்டட அமைப்பிலும், புத்தரது சிலை அமைப்பிலும், வழிபாட்டு முறையிலும் தேராவாத பௌத்த பிரிவின் பண்புகளைக் கொண்டதல்ல.
அனைத்து விதத்திலும், தேராவாதப் பிரிவு எதிர்த்து நின்ற மஹாயானப் பிரிவுக்குரிய பண்புகளைக் கொண்டது. மஹாயானப் பிரிவினரை தேராவாதம் எதிர்த்தமைக்கு மகாவம்சத்திலேயே பல சான்றுகள் உண்டு.
இலங்கையின் வரலாற்றிலேயே அதிகளவு நீர்ப்பாசனப் பணிகளை மகாசேன மன்னன் செய்த போதிலும், உரிய கௌரவத்தைப் பெறாமைக்குக் காரணம் அவர் மஹாயானப் பிரிவினராக இருந்தமையே. இந்த எதிர்ப்புணர்வுக்கு மஹாயானப் பௌத்த பிரிவினர், தேராவாதப் பௌத்த பிரிவினராக இருந்தமைகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
நயினாதீவினைச் சேர்ந்த அரசுடமைகொண்ட சகோதரர்களின் பிணக்கினைத் தீர்க்க புத்த பெருமான் இங்கு வந்தாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. அந்தக் குறிப்பு உண்மையெனில் பௌத்தத்தின் அறிவுரையைக் கேட்கக்கூடிய ஆளுந்தரப்பொன்று வட பாகத்தில் இருந்தமை புலனாகிறது அல்லவா? அதேநேரத்தில் மகாவம்சம் குறிப்பிடும் உத்தரதேசத்தவர்களது (வட மாகாணத்தவர்களது) படையெடுப்பும், தமிழர்களது படையெடுப்புக்களாகவே காட்டப்படுகிறதல்லவா.
உதாரணமாக எல்லாளன், சேனன் குத்திகன் உள்ளிட்ட ஏழு வணிகர்கள் என அனைவருமே வட மாகாணத்திலிருந்து சிங்கள ராச்சியமான அனுராதபுரம் நோக்கி படையெடுத்தவர்களாக காட்டப்படுகிறது. இந்தச் செய்தியிலிருந்து தெரிவதென்ன.
வட மாகாணத்தில் தமிழ் அரசுகள் இருந்துள்ளன. அவை புத்த பெருமானின் ஆலோசனை கேட்டு ஒழுகும் பண்புடையனவாக இருந்திருக்கின்றன.
அதேபோல தமிழகத்தில் சங்கமருவிய காலத்தில் தமிழ் பௌத்த எழுச்சியுற்றிருந்தமைக்கான வலுவான தொல்லியல், இலக்கிய சான்றுகள் உள்ளன.
இக்காலத்தில் உருவான அனைத்து ஆற்றுப்படுத்தல் இலக்கியங்களிலும் பௌத்த தத்துவங்கள் மிகையாக பொதிந்திருக்கின்றன.
தமிழகத்தோடு நெருக்கமான தொடர்பினை மொழி, கலாசார, பண்பாடு விடயங்களில் தமிழகத்தோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு பாகங்கள் அங்கு எழுச்சியுற்றிருந்த தமிழ் பௌத்த பண்பாட்டு விடயங்களையும் நிச்சயமாக ஏற்றிருக்கவே வாய்ப்புண்டு.
பௌத்தம் இலங்கைத் தீவிற்குள் நுழைந்த பிறதான வழியே வடக்கில்தான் இருக்கிறது. ஒரு பண்பாட்டுப் பயணம் இன்னொரு நாட்டுக்குள் முதன்முதலாக நுழையும்போது எடுத்த எடுப்பிலேயே நாட்டின் மத்திய பகுதிக்குள் நுழைய வாய்ப்பில்லை.
தொடர்புகளும், போக்குவரத்து வசதிகளும் குறைந்த வரலாற்றுத் தொடக்க காலப்பகுதியில் எடுத்தவுடன் ஒரு பண்பாட்டு வடிவம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பரவுவது சாத்தியமற்றது. சில நூற்றாண்டுகள் ஓரிடத்தில் தங்கியிருந்து, பின்னர் தனக்கு வாய்ப்பான சூழல் நோக்கி பரவி, தகுந்ததொரு இடத்தைப் பிடித்துக்கொள்வதே பண்பாடுகளின் பொது இயங்கியலாக இருந்திருக்கிறது.
பௌத்த பண்பாட்டிற்கும் அதுவேதான் நடந்திருக்க வாய்ப்புண்டு. தமிழ் பௌத்தமாக இலங்கை தீவுக்குள் நுழைந்த பௌத்த வாழ்வியல் தத்துவம் நாட்டின் மத்திய பகுதியை அடைந்து நிலைபெறும்போது சிங்கள பௌத்தமாக வடிவம்பெற்றிருக்கிறது.
தமிழர்கள் ஏன் தமிழ் பௌத்தத்தைக் கைவிட்டனர்? அதற்கும் பிரதான காரணமே தமிழகம்தான். தமிழகத்தில் எழுச்சி பெற்ற பௌத்தத்தையும், சமணத்தையும் அழிக்க உருவான பல்லவ பண்பாட்டின் தாக்கம் வடக்கு, கிழக்கிலும் ஏற்பட்டது. பல்லவர் காலத்தில் மிக முக்கிய சைவசமயக் காப்பாளர்களாக இருந்த சமயக்குரவர்கள், திருக்கோதீச்சரம், திருக்கோணேச்சரம் மீது பதிகம் பாடுமளவுக்கு பண்பாட்டு ரீதியாகத் தொடர்புபட்டிருக்கிறார்கள்.
எனவே பல்லவர் காலத்தில் தமிழகத்திலிருந்திருந்து பௌத்தமும், சமணமும் எவ்வாறு மக்கள் நீக்கம் செய்யப்பட்டதோ, அவ்வாறே இலங்கையின் வடக்கு, கிழக்கு பாகங்களிலும் நடந்திருக்க வாய்ப்புண்டு. இப்பிராந்திய மக்கள் பின்பற்றாத தமிழ் பௌத்தம் வழக்கொழிந்துபோனது. ஆனால் அதன் எச்சங்களைத் தமிழர்கள் ஒரு போதும் அழிக்கவில்லை.
இலங்கை அரசு தமிழர்கள் மீது அனைத்துவிதமான அழித்தொழிப்பு வேலைகளைக் கட்டவிழ்த்துவிட்ட போதிலும், வடக்கு, கிழக்கு பாகங்களில் இருந்த பௌத்த அடையாளங்களைத் தமிழர்கள் அழிக்கவில்லை.
பௌத்தத்தை தம் எதிர் மதமாகத் தமிழர்கள் கருதியிருப்பின், வடக்கு, கிழக்கில் இருந்த அத்தனை பௌத்த தொல்லியல் எச்சங்களையும் அழித்தொழித்திருக்க முடியுமல்லவா? ஆனால் அதனைத் தமிழர்கள் செய்யாமையின் முக்கிய நோக்கமே, பௌத்தத்தையும் தம்மோடு உள்ளீர்த்துக்கொண்டமைதான்.
தாம் கைவிட்டிருப்பினும், மரபார்ந்த தொல்பொருளொன்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வோடு செயற்பட்டமைதான். இப்போது மீளவும் தமிழ் பௌத்தத்தை ஏற்க முடியுமா? இந்தக் கேள்விக்கு பதில்காண வேண்டிய கட்டத்திற்குத் தமிழர்கள் வந்துள்ளனர்.
ஏற்கனவே சமயப் பிரச்சினைகளால் இனங்களுக்கிடையில் பிளவுகள் ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், மீண்டும் புதியதொரு பிரிவாக தமிழ் பௌத்தத்தை ஏற்று எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் பணியை தமிழர்கள் செய்ய விருப்பார்.
அத்தோடு, தெற்கை மையப்படுத்தி உருவாகியிருக்கும் தேராவாதப் பௌத்த பிரிவு குறித்த அச்சம் தமிழர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அமைதியையும், உயர் மாண்புகளையும், கருணையையும், உயிர்கொல்லாமையையும் வாழ்க்கைத் தத்துவமாக போதித்த வெண்ணிற புத்தபெருமானை ஆக்கிரமிப்பின் அடையாளமாக மாற்றியிருக்கிறது மேலான்மைவாத அரசியல்.
எனவே தமிழ் பௌத்தத்தை மீளக் கொண்டுவருவது இன்னொரு ஆபத்தை வலிந்து ஏற்படுத்திக்கொள்ளும் நிலைமையை ஏற்படுத்தும். தமிழர்கள் தம் பண்பாட்டை பழையன கழிதலும் புதியன புகுதலுமாகவே கட்டமைத்திருக்கிறார்கள்.
பழைமையானவற்றை முற்றாகக் கைவிடாது, தம் வாழ்வோடு இணைத்துப் பாதுகாத்தும் வருகிறார்கள்.
தமிழ் பௌத்ததும் அவ்வாறானதே. நாம் பின்பற்றிய ஒரு பண்பாட்டுக்கூறாகத் தமிழ் பௌத்தத்தை வைத்திருப்பதும், அதனை ஒரு மரபார்ந்த பண்பாட்டு அடையாளமாக ஆவணப்படுத்திக்கொள்வதுமே காலப்பொருத்தமானதாக அமையும்.
-jv