இலங்கையின் உண்மை-நல்லிணக்க பணிகள் தொடர்பில் ஐ.நாவில் ஹிமாலி அருணதிலக கருத்து

இலங்கையில் முன்னெடுக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பணிகளில் இலங்கையின் அர்ப்பணிப்பை ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக எடுத்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.

இதில் ஒரு கட்டமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வருடாந்த அறிக்கை தொடர்பான ஊடாடல் உரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை அமர்வின் போது நடைபெற்றுள்ளது.

சட்ட மற்றும் அரசியல் தாக்கங்கள்

இதன்போது தீர்மானங்களைத் திட்டவட்டமாக நிராகரிப்பதற்கான காரணங்களை இலங்கை காட்டியுள்ளதாகத் தெரிவித்த அருணதிலக்க, ஊடுருவும் பொறிமுறைகள் அனைத்து நாடுகளிலும் சட்ட மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இருதரப்பு பங்காளிகளின் உதவியுடன் நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பணிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், சர்வதேச தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காகப் பயங்கரவாத எதிர்ப்பு யோசனை வரைவு குறித்து ஆலோசனைகள் தொடர்வதாகப் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

 

 

-tw