நாடு எதிர்கொண்டுள்ள கடன் நெருக்கடியைத் தீர்க்க விரிவான மூலோபாய திட்டம்

இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன், நாடு தற்போது எதிர்கொள்ளும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கான விரிவான மூலோபாயத் திட்டத்தை வகுப்பதாகவும் கடன் மறுசீரமைப்பு ஒரு பிரதான முன்னுரிமையாக இருந்தாலும், முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்வதிலேயே முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கனேடிய முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாபருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

ஜூன் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் லண்டனில் நடைபெற்ற சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் (IDU) 40ஆவது ஆண்டு விழாவின் போது இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் சவால்கள், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவை சிக்கலான தலைப்புகளாக மாறியுள்ள தற்போதைய காலகட்டத்தில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பாதுகாப்பான மற்றும் வளமான உலகத்தை உருவாக்க எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பது பற்றி ஆராய உலகத் தலைவர்கள் இந்த ஆண்டு ஒன்று கூடியிருந்தனர்.

ஸ்டீபன் ஹாபர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டமை, நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அமுல்படுத்தப்பட்ட கொள்கை வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் என்பன தொடர்பில் விரிவாகக் கருத்துத் தெரிவித்தார்.

இலங்கையின் நிதி வாய்ப்புகளை வலுப்படுத்தி நீண்டகாலத்திற்கு சாதகமான வர்த்தக சமநிலையை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தாராளமய பொருளாதார நெகிழ்வுக் கொள்கையை துரிதப்படுத்தல் மற்றும் முதலீடுகளை கவர்வதை நோக்காகக் கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

தாம் பிரதமராக இருந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில் தமிழ் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைக்க விரும்புவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை ,புதிய பயங்கரவாத தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுதல் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பது குறித்தும் ஜனாதிபதி இங்கு கருத்துத் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை வரையறுப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் நிலவி வந்த சர்ச்சை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காணாமற்போனோர் அலுவலக நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கேள்வி – இலங்கை எதிர்கொண்டுள்ள சவாலான நிலைமை பற்றி நான் வாசித்து அறிந்துள்ளேன். அந்த சவால்களுக்கு முகம்கொடுத்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் உலகம் விழிப்புடன் அவதானித்துக்கொண்டிருக்கிறது?

பதில் – கடந்த மே மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கை முகம்கொடுத்திருந்த நெருக்கடியான நிலைமையை பற்றி நாம் அறிவோம். இருப்பினும் அந்த நேரத்தில் நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை.

2019 ஆம் ஆண்டில் எமது கட்சியின் பிரதித் தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. அத்தோடு 2019 தேர்தல் மிகவும் விசேடமானதாக அமைந்திருந்த்தோடு மக்கள் மாற்றம் ஒன்றை விருப்பினர்.

நான் கூறியதை போல மிகவும் கடுமையான தோல்வியை தழுவிக்கொண்டோம். கொவிட் தொற்று பரவலுக்கு இலக்காகியிருந்த 2020 ஆம் ஆண்டிலும் ஓகஸ்ட் மாதத்தில் நாம் தேர்தலை நடத்தினோம். அதேபோல் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருந்தேன்.

2016 ஆம் ஆண்டில் நாம் ஆரம்பித்த வேலைத்திட்டங்களுக்கு அமைய இலங்கை அடிப்படை தன்னிறைவை அடைவதற்காக அர்பணிப்புடன் சலுகைகளை மட்டுப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டிருந்த்து.

அதனால் 2018 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டொலர் என்ற அடிப்படை சேவை எம்மிடத்தில் இருந்தது. சிறிய அளவாக இருப்பினும் அந்த இலக்கை நாம் அடைந்தோம். அதனை பலப்படுத்திக்கொள்ளும் இயலுமையும் எம்மிடத்தில் காணப்பட்டது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்தது.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதன் பின்னர் மேலும் ஐந்து பில்லியன் டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கான இயலுமையும் எமக்கு கிடைத்தது.

நான் பிரதமராக இருந்த காலத்தில் ஜப்பான், இந்தியா உள்ளிட்ட ஏனைய தரப்புக்களுடன் பேசி மூன்று பில்லியன் டொலர் பெறுமதியான வேலைத்திட்டங்களை கொண்டு வந்திருந்தேன். அவை அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டன.

கடந்த வருடத்தின் மே 9ஆம் திகதி நாட்டிற்குள் பெரும் குழப்ப நிலை உருவாகியது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் 65 பேருடைய வீடுகளுக்கு தீ மூட்டப்பட்டன. அதனால் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலக நேரிட்டது.

அந்த நேரத்தில் ஆளும் தரப்பு எம்.பி ஒருவரை தொடர்புகொண்டு நான் பேசிக்கொண்டிருந்த போது அந்த நேரத்தில் என்னால் செய்ய முடிந்த உதவி என்னவென கேட்டேன். மறுதினமே ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பை ஏற்படுத்தி பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரியிருந்தார். அவர் அதனை மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் செல்லுமாறு நான் ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கியிருந்தேன். இந்த நிலையில்தான், அரசாங்கத்தை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறும் என்னை பிரதமராக்கி அதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அந்த தருணத்திலும் கடந்த காலங்களில் பெறப்பட்டு, செலுத்த வேண்டிய கடன் தவணை 8 பில்லியன் டொலர்களாக இருந்தது. 2022 ஏப்ரல் மாதத்தில் இலங்கை வங்குரோத்து நாடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாம் வழமைக்கு திரும்பும் போது ஆர்பாட்டக் காரர்கள் மீண்டும் வீதியில் இறங்க ஆரம்பித்தனர். அதேபோல் ஜூலை 9 ஆம் திகதி பெருமளவானர்கள் கொழும்பில் கூடியிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தமையால். ஜனாதிபதி தப்பியோடி இலங்கை கடற்படையின் கப்பலொன்றில் தஞ்சம் அடைந்து உதவியை பெற்றுக்கொள்ள நேரிட்டது. அன்று மாலை கட்சித் தலைவர்கள் கூடி ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று தீர்மானித்தனர். அதன் பின்னர் பதில் ஜனாதிபதியாக என்னை நியமித்துவிட்டு அரசியலமைப்புக்கமைய புதியவரை நியமித்த பின்னர் பிரதமர் பதவியிலிருந்து என்னை பதவி விலகுமாறு எதிர்க்கட்சியினர் கோரினர். அந்த நேரத்தில் சில ஊடகங்களின் தூண்டுதல் காரணமாக ஆர்ப்பாட்டக் காரர்கள் சிலர் எனது வீட்டிற்கும் தீ மூட்டினர். நான் பதவி விலகிச் செல்வேன் என அவர்கள் நினைத்திருந்தனர். மறுநாள் சில தூதுவர்கள் என்னை பதவி விலகுமாறு அறிவுறுத்தினர்.

சிலர் சபாநாயகரை பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கோரியிருந்தனர். எவ்வாறாயினும் அந்த இரு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன. எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தமையால் நானும் பதவி விலகப்போவதில்லை என அறிவித்திருநதேன். பின்னர் ஜனாதிபதியை நாட்டிலிருந்து வெளியேற்றி மாலைத்தீவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 

-ad