ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு பொறிமுறையில் இருந்து இலங்கை விளங்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் உடன் நடத்திய பேச்சின் போது, உலகளாவிய குற்றவியல் நீதிக்கான துணைச் செயலாளர் அம் பெத் வான் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
ஒரே நாளில் திணைக்களத்தின் 2 உதவிச் செயலாளர்களையும், தேசிய பாதுகாப்புச் சபையின் பணிப்பாளரையும், செனட் மற்றும் காங்கிரஸ் அயல் உறவு குழுக்களின் மூத்த அதிகாரிகளையும் அடுத்தடுத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கண்காணிப்பு
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலமைகள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளன.
சுமார், ஒரு வருடத்திற்கு முன்னர் இதே போன்ற உலகத் தமிழர் பேரவையினரை அழைத்து இராஜாங்கத் திணைகளம் நடத்திய கலந்துலையாடல் இது என்பதால், இக்காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்டிருக்க கூடிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து சந்திப்பில் தீவிரமாக ஆராயப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தீவிரமாக எடுக்கப்பட்டு ஒரு தசாப்த காலத்திற்கு அதிகமாகி விட்ட நிலையில், அது பேரவையின் பிரதான நிகழ்ச்சி நிரலில் இருந்து ஒதுக்கப்பட்டுவிடக்கூடிய அபாயம் குறித்து தமது கவலையை உலகத்தமிழர் பேரவையினர் வெளிப்படுத்தியிருந்தனர்.
இவ்விடயத்தை மனித உரிமை பேரவைக்கு கொண்டு வந்ததில் அமெரிக்காவே முன் நின்று பங்காற்றியதென்றவகையில், அதன் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பிலும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த உலகளாவிய குற்றவியல் நீதிக்கான துணைச் செயலாளர் அம் பெத் வான், மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் ஒதுக்கப்படுவதற்கு அமெரிக்க அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார்.
இதன்போது, இலங்கை மீதான பொறிமுறை ஐநாவில் தொடர்வதை அமெரிக்கா உறுதிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையின் பொருளாதாரம் திடமான நிலையில் அடைவதாயின், அங்கு அரசியல்நிலை சுமூகமானதாக இருக்க வேண்டும்.
அதற்கு ஈழ தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று உலகத்தமிழர் பேரவை பிரதிநிதிகள் இச்சந்திப்புகளின் போது வலியுறுத்தியுள்ளனர்.
முழு ஆதரவு
இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரசியல் தீர்வை கொண்டு வருவதற்குமான எந்த ஒரு முயற்சிக்கும் அமெரிக்கா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்று இராஜாங்கத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுடன் இருதரப்பு சந்திப்புகள் எல்லாவற்றிலும் இலங்கை விவகாரமும் ஒரு பேசு பொருளாக எப்போதும் இருப்பதாகவும் இந்திய பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது இந்த விடயங்கள் பேசப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அரசியலமைப்பில் உள்ள 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அரசியல் தீர்வை நோக்கிய பயணத்திற்கான ஆக்கபூர்வமான முதல் படியாக அமையும் என்று அமெரிக்க கருதுவதாகவும் இசந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனாட் லூ, உலகளாவிய குற்றவியல் நீதிக்கான துணைச் செயலாளர் அம் பெத் வான், தேசிய பாதுகாப்புச் சபையின் இலங்கை, நேபாளம் மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர், செனட்டின் அயலுறவுத்துறை குழு அலுவலகத்தின் மூத்த பணிநிலை பணிப்பாளர், அமெரிக்க காங்கிரஸின் அயலுறவுத்துறை அலுவலகத்தின் மூத்த பணநிலை பணிப்பாளர் ஆகியோருடன் இந்த சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
-ib