இலங்கையில் திருப்பதி கோவிலை கட்ட கோரிக்கை

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்துப் பேசிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையில் திருப்பதி கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் (ஏபி) உள்ள திருப்பதி கோவிலுக்குச் செல்ல விரும்பும் ஏராளமான பக்தர்கள், ஆனால் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு ஆளுநர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். வயோதிகம் காரணமாக யாத்திரை மேற்கொள்ள விரும்பும் கணிசமான எண்ணிக்கையிலான பக்தர்களால் அவ்வாறு செல்ல முடியாதுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

முதல்வர் ரெட்டி கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்ததாக கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் தொண்டமான், ஆந்திர பிரதேச வர்த்தக சம்மேளன அதிகாரிகளையும் சந்தித்து இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினார்.

விவசாயம் மற்றும் ஆடைத் துறைகள் போன்ற துறைகளில் ஆந்திர அதிகாரிகளுடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் ஆளுநர் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது, திருகோணமலை துறைமுகத்தில் கைத்தொழில் பூங்கா அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

 

 

-dm