சட்டங்களை இயற்றுவதனால் மாத்திரம் இலங்கையில் ஊழலை ஒழிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஊழல் வாதியொன கூச்சலிட்டவர்கள், தற்போது அவரின் கீழுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பதாகவும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இன்று ஆளும் தரப்பில் இருப்பதாகவும் அனுர குமார திஸாநாயக்க கடுமையாக சாடியுள்ளார்.
பொருளாதார குற்றவாளிகள்
இதுதொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், “விசேடமாக எமது நாடு, பொருளாதார குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை நான் கூறவில்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்டவர்கள் இலங்கையில் பொருளாதார குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.
தற்போது பொருளாதார குற்றவாளிகள் சுதந்திரமாக இருக்கும் போது, அதன் பிரதிபலனை அனுபவிக்க வேண்டிய நிலைமை இந்த நாட்டு மக்களுக்கே ஏற்பட்டுள்ளது.
இன்று தொழில் செய்யும் மக்களின் பெருந்தொகையை வரியாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார குற்றவாளிகள் இழைத்த குற்றங்களுக்கான இழப்பீடாகவே அவர்கள் இந்த வரியை செலுத்துகின்றனர்.
அதேபோன்று, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஆகியவற்றின் அங்கத்தவர்களுக்கு இந்த பொருளாதார குற்றவாளிகள் மேற்கொண்ட அழிவிற்காக இழப்பீடு செலுத்த நேரிட்டுள்ளது.
அதேபோன்று இந்த பொருளாதார குற்றவாளிகளின் பிரதிபலானாக இன்று எமது நாட்டின் சாதாரண பிரஜைகளுக்கான பொருட்களின் விலை உயர்வு, தாங்கி கொள்ள முடியாத வாழ்க்கை செலவு உட்பட பொதுமக்களுக்கு இன்று பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
காலம் முழுவதும் எமது பொருளாதார குற்றவாளிகளால் அழிவடைந்த தேசமாக இலங்கை காணப்படுகின்றது.
எனினும் இன்றும் மிகவும் மகிழ்ச்சியாக, சுதந்திரமாக, சமூகத்தில் வாழ்கின்றனர்.
சிலர் பிரபுகளாகவும் சிலர் சேர் ஆகவும் சிலர் முன்னாள் அதிபர்களாகவும், சிலர் முன்னாள் அமைச்சர்களாகவும், சிலர் உயர்மட்ட அரச அதிகாரிகளாகவும் உள்ளனர்.
ஆகவே இந்த அழிவிற்கு இந்த நாட்டை இழுத்துச் சென்ற இந்த பொருளாதார குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் நிறுத்துவது தொடர்பாக இந்த நாட்டில் மிகப் பாரிய எதிர்பார்ப்பும் விரும்பமும் உள்ளது.
புதிய சட்டமூலம்
புதிய சட்டமூலத்தை கொண்டுவருவதாக கூறுகின்றனர். தற்போதுள்ள சட்டமூலமானது போதுமான ஒன்றாக இல்லாதது எதன் காரணத்தினால்?
25 ஆயிரத்திற்கும் அதிகமாக அரச சொத்துக்களுக்கு இழப்பை ஏற்படுத்தியிருந்தால், நீதவான் நீதிமன்றத்திற்கு பிணை வழங்கும் அதிகாரம் இல்லை எனும் பொதுச் சொத்துக்கள் சட்டம் உள்ளது.
நிதிச் சுத்தமாக்கல் சட்டம், எந்தவொரு பிரஜையும் தாம் பயன்படுத்தும் பணத்தின் அளவை, எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்தாவிடின் அந்த சொத்துக்களை கையகப்படுத்தும் சட்டம் உள்ளது.
அதேபோன்று லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுச் சட்டம், ஊழல் தொடர்பாக மிகவும் வலுவான சட்டம்.
அதேபோன்று குற்றவியல் சட்டத்தில் இங்கு பிரச்சினை இல்லை.
சில சட்டங்களை முழுமை செய்ய வேண்டுமாயின் அதற்கு நாம் ஆதரவு வழங்குகின்றோம்.
எனினும் தற்போதுள்ள சட்டங்கள் பலவீனமடைந்துள்ளதா?
தற்போதுள்ள சட்டம் பலவீனமானது என்றால், தேங்காய் எட்டை திருடிய நபர் எவ்வாறு சிறை செல்வார்.
லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் சிறை செல்வது எவ்வாறு?
கிராம உத்தியோகத்தர் பணம் பெற்றார் என்பதற்காக எவ்வாறு சிறை செல்வார்.
இல்லை, அரசியல் அதிகாரம் காரணமாகவே இருக்கும் சட்டங்களில் இருந்து குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனரா?
இந்த ஊழல் வலையமைப்பில், அரச அதிகாரிகளில் பாரிய பங்கானவர்கள் இருக்கின்றனர்.
இவர்களோடு, உயர் அதிகாரிகளின் கையாட்கள், காவல்துறையிலுள்ள சிலர் டீல் போடும் வர்த்தகர்கள், விரும்பியோ விரும்பாவிட்டாலோ சட்டத்தை செயற்படுத்துவோர் சிலர், ஊடக உரிமையாளர்கள் சிலர் இருக்கின்றனர்.
இது ஒன்றாக கட்டியெழுப்பட்ட ஊழல் வலையமைப்பு. இந்த வலையமைப்பு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றது. அதற்கு மிகவும் வலுவான அரசியல் தேவை. சட்டத்தின் மூலம் மாத்திரம் இதனை செய்ய முடியும் என நம்பினால், அது மிகப் பெரிய முட்டாள்தனம்” என்றார்.
-ib