வரலாறுகளும், தொன்மைமிகு சின்னங்களும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவை

“ஒரு இனத்தின் இருப்பும், அதன் பெருமையும், அடையாளங்களும், வரலாற்றுச் சான்றுகளும் வெளிக்கொணரப்பட்டு நிகழ்கால சந்ததியினரின் வாழ்வை செழுமைப்படுத்துவதோடு நின்று விடாது எதிர்கால சந்ததியினருக்கான வாழ்வியல் ஆதாரங்களையும் தொல்லியல் வழங்க வேண்டும்” என்று யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவரும் பேராசிரியருமான பரமு புஷ்பரட்னம் தெரிவித்தார்.

நேற்றைய தினம்(16) இடம்பெற்ற நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறப்பு விழாவின் போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.

வரலாற்று எச்சங்கள்

இது தொடர்பில் மேலும் அவர் உரையாற்றுகையில்“ சிறு வயதில் தோன்றிய ஆர்வம் பதின்ம வயதை எட்டையில் இலக்காக மாறி இன்று என்னை தொல்லியலாளராக வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றது என்று கூறி பேச ஆரம்பித்தார்.

கடந்த கால வரலாற்று எச்சங்களே இன்றைய எங்கள் வாழ்க்கை முறையினை நிர்வகித்துக்கொண்டு இருக்கிறது. இன்றிலிருந்து ஏறக்குறைய 5000 ஆண்டுகளிற்கு முன்னர் நிலவிய நாகரிகங்கள், இன்று அந்த நாகரிகம் தழுவிய மக்களின் வாழ்க்கை முறையில் செல்வாக்குச் செலுத்துவதை எங்களால் காண முடிகின்றது.

சிந்து வெளி நாகரிகம்

”எங்கள் கலாசாரத்தின் தொட்டிலான சிந்து வெளி நாகரிகம் நிலவிய பிரதேசங்களின் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததாக இருக்கின்ற போதிலும், அதற்கான முறையான சான்றுகளை எங்களால் பெற முடியாமல் இருப்பது இன்றைய எங்கள் வாழ்க்கை முறை பிறழ்வுக்கு ஓர் முக்கிய காரணம் என்பதை எம்மால் மறுக்க முடியாது.

இல்லையேல் அவை இன்னும் முறையாக வெளிக்கொணரப்படவில்லை என்று கூட கூறலாம்.

மனிதனின் மரபணு வாயிலாக அவன் பரம்பரை இயல்புகள் பேணப்படுவதைப் போலவே, நம் வரலாற்று சான்றுகளே நம் எதிர்கால வாழ்வைப் பேணும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

புதைந்து கிடக்கும் வரலாறுகள்

நிகழ்காலம் கடந்த காலத்தின் நீட்சியாகவும், எதிர்காலம் நிகழ்காலத்தின் நீட்சியாகவும் இருக்கும் விதத்தில், தொல்லியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் எப்போதும் பொருத்தமான விதத்தில் செயலாற்ற வேண்டும்.

இன்றைய நிகழ்வு, அதனை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கின்றது என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

நாம் யார், எங்கிருந்து வந்திருக்கிறோம், எங்கு செல்கிறோம் இது போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை தேடுவோருக்கு விடையளிப்பதற்கான பிள்ளையார் சுழியாக இந்த நிகழ்வை நான் பார்க்கின்றேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

அது மாத்திரமல்லாமல் புதைந்து கிடைக்கும் நம் வரலாறுகளும் அதன் தொன்மை மிகு சின்னங்களும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். நம் எதிர்கால சந்ததியினருக்கு கடத்தப்பட வேண்டும் அதற்காக நாம் அனைவரும் ஒன்று கூடி செயலாற்ற வேண்டும் எனவும் அவர் உரையாற்றினார்.

 

 

 

-ib