மக்களை பொருளாதார நெருக்கடியில் தள்ளுகின்றனர்

பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர் நோக்கி வரும் சூழ்நிலையில் சுற்றுலாத் துறையினை காரணம் காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை இங்குள்ள அரசியல் வாதிகள் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேசத்தில் மதுபானசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக பொது மக்களினால் இன்று (17) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

நேற்று (16) மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த இரா. சாணக்கியன்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடியினால் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பில் உள்ள சில அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் மிக மோசமானதாக மாறியிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு மதுபானசாலைகளை திறப்பதற்கு மட்டக்களப்பில் உள்ள சில அரசியல்வாதிகள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்க வேண்டும் என்ற பொய்யான விடயத்தினை வைத்துக் கொண்டு புதிதாக மதுபானசாலைகளை திறப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் சிலர் முன்னெடுப்பது என்பது கவலையான விடயம்.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவானது உண்மையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் அதிக தொகையினைக் கொண்ட பிரதேசமாகும். இந்த பிரதேசத்தில் மட்டும் மூன்று புதிய மதுபானசாலைகளை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை சுற்றுலாத்துறையில் அபிவிருத்திசெய்வது என்றால் பல விடயங்கள் இருக்கின்றது, அதனை செய்வதற்கு நாங்கள் அதனை பாராளுமன்றத்தில் பல தடவைகள் கூறியிருக்கின்றோம்.

இதில் இன்னும் கவலையான விடயம் பெரும்பான்மையின மக்களின் பகுதிகளில் இருந்து அகற்றப்படும் மதுபானசாலைகளை இங்கு கொண்டு வந்து அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதே போன்று தான் கிழக்கு மாகாண ஆளுனர் கிழக்கு மாகாணத்தில் வேகமாக சில செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது மட்டக்களப்பில் உள்ள சில இராஜாங்க அமைச்சர்கள் அவருடன் ஒட்டிக் கொண்டு பெயர் வாங்குவதற்கு முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.

17 ஆம் திகதி இன்று இந்த மதுபானசாலைகளுக்கு எதிராக அடையாளமாக வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கையினை முன் வைக்கின்றேன். என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

 

 

-ad